வீடியோ : யோவ் பேசிகிட்டு இருக்கும் போதே எங்க அடிக்கிற – நெஹ்ராவின் சேட்டையால் களத்தில் தவித்த முரளி கார்த்திக்

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 29ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 39வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த குஜராத் டைட்டன்ஸ் தங்களது 6வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறியது. ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் போராடி 179/7 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ரஹ்மத்துல்லா குர்பாஸ் அதிரடியாக செயல்பட்டு 81 (29) ரன்களும் ஆண்ட்ரே ரசல் 34 (19) ரன்களும் எடுக்க குஜராத் சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதை தொடர்ந்து 180 ரன்களை துரத்திய குஜராத்துக்கு சுப்மன் கில் 49 (35) ரன்கள் விளாசி நல்ல தொடக்கம் கொடுத்த நிலையில் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய தமிழக வீரர் விஜய் சங்கர் 51* (24) ரன்களும் நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லர் 32* (18) ரன்களும் எடுத்து 17.5 ஓவரிலேயே இலக்கை எட்டிப் பிடிக்க வைத்து எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். மறுபுறம் பேட்டிங்க்கு சாதகமான ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பேட்டிங்கில் 200 ரன்கள் எடுக்கத் தவறிய கொல்கத்தா பந்து வீச்சிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

எங்கய்யா அடிக்கிற:
இந்த வெற்றிக்கு 4 ஓவரில் 22 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஜோஸ்வா லிட்டில் ஆட்டநாயகன் விருதை வென்றார். முன்னதாக 3.30 மணிக்கு துவங்க வேண்டிய இந்த போட்டி கொல்கத்தாவில் பெய்த மழையால் ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது. அந்த சமயத்தில் குஜராத்தின் பயிற்சியாளராக இருக்கும் முன்னாள் இந்திய வீரர் ஆசிஷ் நெஹ்ரா இப்போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்ட மற்றொரு முன்னாள் இந்திய வீரர் முரளி கார்த்திக் உடன் பேசிக் கொண்டிருந்தார். இந்தியாவுக்காக இணைந்து விளையாடி நல்ல நட்பை கொண்டுள்ள இவர்கள் நீண்ட நாட்கள் கழித்து சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால் ஜாலியாக பேசிக் கொண்டனர்.

ஆனால் அப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே முரளி கார்த்திக் கையைப் பிடித்து தூக்கிய நெஹ்ரா தனது முழங்காலால் அவரின் ஆணுறுப்பில் அடித்தார். பொதுவாக அந்த இடத்தில் லேசாக பட்டாலே ஆண்களால் வலி தாங்க முடியாது என்ற நிலைமையில் ஆஷிஷ் நெஹ்ரா இப்படி செய்வார் என்று கொஞ்சமும் எதிர்பாராமல் அடி வாங்கிய முரளி கார்த்திக் அப்படியே மைதானத்தில் விழுந்து துடித்தார். மறுபுறம் நண்பனை அவ்வாறு தாக்கிய மகிழ்ச்சியில் திளைத்த நெஹ்ரா சிரித்த முகத்துடன் அவருக்கு கையை கொடுத்து தூக்கி விட்டார்.

- Advertisement -

அவரைப் பிடித்துக் கொண்டே தட்டு தடுமாறி எழுந்த முரளி கார்த்திக் தம்மை தாக்கியதை போலவே பதிலுக்கு தாக்க முயற்சித்த போது அங்கிருந்து நெஹ்ரா ஓட்டம் பிடித்து குஜராத் பெவிலியினில் சென்று அமர்ந்து கொண்டு தன்னுடைய குழந்தைத்தனமான செயலை நினைத்து மகிழ்ச்சியடைந்தார். அப்படி இந்தியாவுக்காக விளையாடிய முன்னாள் வீரர்கள் பல ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்திருக்கும் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேரலையில் இவ்வாறு பள்ளி நண்பர்களைப் போல் நடந்து கொண்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குறிப்பாக என்ன தான் ஜாலியாக நடந்து கொள்ளக்கூடிய நபராக இருந்தாலும் அதற்காக ஒரு ஆணாக இருந்து கொண்டு நண்பனை இவ்வாறு அந்த இடத்தில் தாக்கலாமா என்றும் அடிப்பதற்கு வேறு இடமே கிடைக்கவில்லையா என்றும் நெஹ்ராவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

இதையும் படிங்க:DC vs SRH : போராடி வெற்றியை கையில் வைத்திருந்த டெல்லி – கடைசி நேரத்தில் ஹைதராபாத் பறித்தது எப்படி

அதை தொடர்ந்து சிறப்பான வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து கோப்பையை தக்க வைப்பதற்காக விளையாடி வரும் குஜராத் தன்னுடைய அடுத்த போட்டியில் மே 2ஆம் தேதி டெல்லியை எதிர்கொள்கிறது. அதே போல் 7வது இடத்தில் தவிக்கும் கொல்கத்தா மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப தன்னுடைய அடுத்த போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது.

Advertisement