DC vs SRH : போராடி வெற்றியை கையில் வைத்திருந்த டெல்லி – கடைசி நேரத்தில் ஹைதராபாத் பறித்தது எப்படி

DC vs SRH 2
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 29ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 40வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் திண்டாடும் இவ்விரு அணிகளும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு மயங்க அகர்வால் ஆரம்பத்திலேயே 5 (6) ரன்களில் தடுமாறி அவுட்டான நிலையில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ராகுல் திரிபாதியும் 10 (6) ரன்களில் அவுட்டாகி எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் சென்றார்.

இருப்பினும் மறுபுறம் இளம் வீரர் அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் கேப்டன் ஐடன் மார்க்ரமை 8 (13) ரன்களில் காலி செய்த மிட்சேல் மார்ஷ் அடுத்து வந்த ஹாரி புரூக்கை டக் அவுட்டாக்கினார். அதனால் தடுமாறிய ஹைதராபாத்தை முடிந்தளவு அதிரடியாக விளையாடி காப்பாற்றி அபிஷேக் சர்மாவும் 12 பவுண்டரி 1 சிக்சருடன் 67 (36) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இறுதியில் அப்துல் சமத் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 28 (21) ரன்களும் அகில் ஹொசைன் 16* (10) ரன்களும் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் ஹைதராபாத் 197/6 ரன்கள் குவித்தது. டெல்லி சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் 4 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். அதைத்தொடர்ந்து 198 ரன்களை துரத்திய டெல்லிக்கு புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே டேவிட் வார்னர் போல்ட்டாகி டக் அவுட்டாகி சென்றதால் பெரிய பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் அடுத்து களமிறங்கிய மிட்சேல் மார்ஷ் உடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் பில் சால்ட் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்து சரிவை சரி செய்தார்.

அதே வேகத்தில் நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று 12வது ஓவர் வரை ஹைதராபாத் பவுலர்களை வெளுத்து வாங்கிய இந்த ஜோடி 112 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்த போது பில் சால்ட் 9 பவுண்டரியுடன் அரை சதமடித்து 59 (35) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அப்போது வந்த மனிஷ் பாண்டே பொறுப்பின்றி 1 (3) ரன்னில் அவுட்டான நிலையில் மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட மிட்சேல் மார்ஷ் 1 பவுண்டரி 6 சிக்ஸர் உடன் 63 (38) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அப்போது டெல்லியின் வெற்றி கையில் இருந்தாலும் அடுத்து களமிறங்கிய சர்பராஸ் கானை இம்பேக்ட் வீரராக விளையாடிய தமிழக வீரர் நடராஜன் யார்க்கர் பந்தால் 9 (10) ரன்னில் கிளீன் போல்ட்டாக்கிய நிலையில் மறுபுறம் அதிரடி காட்ட முயன்ற பிரியம் கார்க்கை 12 (9) ரன்களில் மயங் மார்கண்டே காலி செய்தார். அந்த தருணம் போட்டியில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியதை போல் ரன் ரேட்டும் அதிகரித்ததால் ஏற்பட்ட கடைசி நேர பரபரப்பான அழுத்தத்தில் அக்சர் படேல் அதிரடியாக விளையாடி 1 பவுண்டர் 2 சிக்சருடன் 29* (14) ரன்களும் ரிபல் படேல் 11* (8) ரன்கள் எடுத்தும் 20 ஓவர்களில் போராடி டெல்லி 188/6 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதனால் வெறும் 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி த்ரில் வெற்றி பெற்ற ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக மயங் மார்கண்டே 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இப்போட்டியில் வார்னர் ஆரம்பத்திலேயே அவுட்டானாலும் சால்ட் – மார்ஷ் ஆகியோர் உண்மையாகவே மிகச் சிறப்பாக விளையாடி டெல்லியின் ஹாட்ரிக் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்தனர். ஆனால் டெத் ஓவர்களில் அபாரமாக செயல்பட்ட ஹைதராபாத் அவர்கள் அவுட்டானதும் வந்த வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்து டெல்லி கையில் வைத்திருந்த வெற்றியை கடைசி நேரத்தில் பறித்தது.

இதையும் படிங்க: GT vs KKR : மேட்சுக்கு முன்னாடி தான் ஹார்டிக் பாண்டியா கிட்ட அந்த பிளான் பத்தி பேசுனேன் – ஆட்டநாயகன் ஜாஷ் லிட்டில் பேட்டி

அதன் காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தில் அக்சர் பட்டேல் போராடியும் 6வது தோல்வியை பதிவு செய்த டெல்லி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை வலுவாக பிடித்துள்ளது. மறுபுறம் முக்கிய நேரத்தில் அபாரமாக செயல்பட்ட ஹைதராபாத் 8 போட்டிகளில் 4வது வெற்றியை பதிவு செய்து மும்பையை 9வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளி 8வது இடத்திற்கு முன்னேறியது.

Advertisement