PAK vs AFG : சூரையாடப்பட்ட ஷார்ஜா மைதானம்.. பாக் ரசிகர்களுக்கு காயம்.. பாகிஸ்தான் கண்டனம்

Afg vs Pak Fans Fight
- Advertisement -

வரலாற்றில் 15வது முறையாக ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பையில் செப்டம்பர் 7ஆம் தேதியான நேற்று நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சார்ஜாவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 129/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் ஜாட்ரான் 35 (37) ரன்கள் எடுக்க பாகிஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஹாரீஸ் ரவூப் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதன்பின் 130 என்ற எளிமையான இலக்கை துரத்திய பாகிஸ்தான் எளிதாக வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் முதல் ஓவரிலேயே அட்டகாசமாக பந்து வீசிய பரூக்கி முதுகெலும்பான கேப்டன் பாபர் அசாமை கோல்டன் டக் அவுட் செய்து மிரட்டினார். அத்துடன் முஹம்மது ரிஸ்வான் 20, பக்கார் ஜமான் 5, அஹமத் 30, சடாப் கான் 36 என முக்கிய வீரர்களை பெரிய ரன்கள் எடுக்க விடாமல் ஆப்கானிஸ்தான் அட்டகாசமாக பந்து வீசியது. அதனால் சீரான இடைவெளிகளில் 9 விக்கெட்டுக்களை இழந்த பாகிஸ்தான் தோல்வியின் பிடியில் சிக்கிய போது கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அதை வீசிய பரூக்கி யார்கர் பந்துகளை வீச முயற்சித்து புல் டாஸ் பந்துகளை போட்டார். அதை பயன்படுத்திய பாகிஸ்தானின் நசீம் ஷா யாருமே எதிர்பாராத வகையில் அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்டு வெறும் 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

கண்ணீருடன் ஆப்கானிஸ்தான்:
மறுபுறம் கடைசிவரை போராடி தோல்வியடைந்த ஆப்கானிஸ்தான் ஏற்கனவே இலங்கையிடம் தோற்றிருந்ததால் இந்த ஆசிய கோப்பையிலிருந்து வெளியேறியது. அதேபோல் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியாவும் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் தோல்வியடைந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் இந்த தோல்வியால் அதிகாரபூர்வமாக வெளியேறியுள்ளது. முன்னதாக அனல் பறந்த இந்த போட்டியில் 18வது ஓவரில் ஆசிப் அலியை அவுட்டாக்கிய ஆப்கானிஸ்தான் பவுலர் பரீட் அஹமத் அதை அவருடைய அருகில் சென்று ஆக்ரோஷமாக சில வார்த்தைகளை உபயோகித்து கொண்டாடினார்.

அதனால் ஆத்திரமடைந்த ஆசிப் அலி பேட்டால் அவரை அடிக்க முயற்சித்ததால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதை வழக்கம் போல இதர வீரர்களும் நடுவர்களும் உள்ளே புகுந்தது தடுத்த நிலையில் இப்போட்டியில் உயிரைக் கொடுத்துப் போராடிய போதிலும் தோல்வியை சந்தித்ததால் சில ஆப்கானிஸ்தான் வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர் விட்டனர்.

- Advertisement -

அடிஉதை, சூரையாட்டம்:
அப்படி தங்களது வீரர்களே உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டதை மைதானத்திலிருந்து நேரடியாக பார்த்து தாங்க முடியாத ஆப்கானிஸ்தான் ரசிகர்களிடம் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் சில பாகிஸ்தான் ரசிகர்கள் வாய் சவடாலாக பேசியதாக தெரிகிறது. அதனால் ஏற்கனவே தோல்வியடைந்த சோகத்திலும் வலியிலும் வேதனையிலும் இருந்த சில ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் வம்பிழுத்த பாகிஸ்தான் ரசிகர்களை மைதானத்தில் அமர்வதற்காக பதிவிடப்பட்டிருந்த நாற்காலியை பிடுங்கி சரமாரியாக அடித்தார்கள்.

அதனால் வாக்கு வாதமும் கைகலப்பும் ஏற்பட்டதால் போர்க்களமாக மாறிய சார்ஜா மைதானத்தில் இருநாட்டு ரசிகர்களும் கடுமையாக மோதிக் கொண்டனர். அதில் தோல்வியின் வேதனையால் இருந்த ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் வேதனையோடு வேதனையாக வம்பிழுத்த பாகிஸ்தான் ரசிகர்களை அடித்து நொறுக்கி ஓட விட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதற்காக மைதானத்தில் இருந்த நாற்காலிகள் பயன்படுத்தப்பட்டதால் இப்போட்டி நடைபெற்ற சார்ஜா மைதானம் சூறையாடப்பட்டதற்கு நிகரான பாதிப்புகளை சந்தித்தது.

பாகிஸ்தான் கண்டனம்:
அதுபோக மைதானத்துக்கு வெளியேயும் இந்த மோதல் தொடர்ந்த்து. இப்படி இரு நாட்டு ரசிகர்கள் மீதும் தவறு இருந்தாலும் எல்லை மீறிய ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மீதே அதிகமான தவறுகள் உள்ளது. இந்த நிலைமையில் ஜென்டில்மேன் விளையாட்டு என்றழைக்கப்படும் கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்பதை மறந்து இப்படி ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட ரசிகர்களுக்கு பலரும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக எல்லை மீறிய ஆப்கானிஸ்தான் ரசிகர்களுக்கு சோயப் அக்தர் உள்ளிட்ட நிறைய பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கடுமையான கண்டனம் தெரிவிக்கின்றனர். மேலும் இதில் ஐசிசி தலையிட்டு தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisement