SL vs PAK : வீழ்ந்த பாகிஸ்தான், இலங்கையின் வெற்றியை வெறித்தனமாக கொண்டாடிய ஆப்கன் ரசிகர்கள் – வீடியோ உள்ளே

SL vs PAK Afg Fans
- Advertisement -

வரலாற்றில் 15வது முறையாக நடைபெற்ற 2022 ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை இளம் வீரர்களைக் கொண்ட இலங்கை அற்புதமாக செயல்பட்டு யாருமே எதிர்பாராத வகையில் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. செப்டம்பர் 11ஆம் தேதியான நேற்று துபாயில் தங்களைப் போலவே லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் அசத்திய பாகிஸ்தானை எதிர்கொண்ட அந்த அணி முதலில் பேட்டிங் செய்து போராடி 170/6 ரன்கள் சேர்த்தது. குசால் மெண்டிஸ் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 58/5 என ஆரம்பத்திலேயே தடுமாறிய தங்களது அணியை மிடில் ஆர்டரில் அசத்திய ஹசரங்கா அதிரடியாக 36 (21) ரன்களும் கடைசி வரை அவுட்டாகாமல் பினிஷிங் கொடுத்த ராஜபக்சா 71* (45) ரன்களும் எடுத்து காப்பாற்றினர்.

அதை தொடர்ந்து 171 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு பாபர் அசாம் 5, பக்கார் ஜமான் 0 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி சென்றனர். அதனால் 22/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் களமிறங்கிய இப்திகார் அகமது 32 ரன்களும் தொடக்க வீரர் முஹம்மது ரிஸ்வான் 55 ரன்களும் எடுத்து போராடி ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் இலங்கையின் சிறப்பான பந்து வீச்சில் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

கொண்டாடும் ரசிகர்கள்:
அதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை டாஸ் தோற்றால் தோல்வி உறுதி என்ற துபாய் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 58/5 என திண்டாடிய போதிலும் அதிலிருந்து மீண்டெழுந்து 6வது ஆசிய கோப்பையை வென்று வரலாறு படைத்தது. மேலும் இந்த வெற்றி சமீப காலங்களில் தரமான வீரர்கள் இல்லாமல் பலவீனமாக மாறி ஐசிசி தரவரிசை 8வது இடத்தில் திண்டாடும் இலங்கை கிரிக்கெட்டில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்பதால் அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மறுபுறம் உலகின் டாப் 2 டி20 பேட்ஸ்மேன்களை தொடக்க வீரர்களாக வைத்திருந்தும் டாஸ் வென்றும் 58/5 என ஆரம்பத்தில் அசத்தலாக செயல்பட்டும் அதன்பின் சொதப்பிய பாகிஸ்தான் வெறும் கையுடன் வீட்டுக்கு திரும்பியது அந்நாட்டு ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் ஏமாற்றமடைய வைத்துள்ளது. இந்நிலையில் இலங்கை பெற்ற இந்த வெற்றியை இலங்கை ரசிகர்களை விட ஆப்கானிஸ்தான் ரசிகர்களும் மொத்த நாடும் கோலாகலமாக கொண்டாடி வருகிறது என்றே கூறலாம்.

- Advertisement -

ஏனெனில் இந்த தொடரில் பாகிஸ்தானை விட சிறப்பாக விளையாடிய ஆப்கானிஸ்தான் சூப்பர் 4 போட்டியில் வென்றே தீரவேண்டும் என்ற நிலைமையில் வெறும் 129 ரன்களை கட்டுப்படுத்த போராடி வெறும் 1 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் தோற்றது. சார்ஜாவில் பரபரப்பாக நடைபெற்ற அந்தப் போட்டியில் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட போது ஃபுல் டாஸாக வீச முயன்ற பரூக்கியின் அடுத்தடுத்த பந்துகளில் சிக்சர் அடித்த டெயில் எண்டர் நசீம் ஷா காலத்திற்கும் மறக்க முடியாத தோல்வியை பரிசளித்தார்.

அதைவிட அந்த போட்டியின் 18வது ஓவரில் விக்கெட் எடுத்த மகிழ்ச்சியை ஆக்ரோஷத்துடன் கொண்டாடிய ஆப்கானிஸ்தான் வீரர் பரீட் அஹமதை பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி பேட்டால் அடிக்க சென்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால் கொந்தளித்த ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் போட்டி முடிந்ததும் தங்களிடம் வம்பிழுத்த பாகிஸ்தான் ரசிகர்களை மைதானத்தில் இருந்த நாற்காலிகளை பிடுங்கி சரமாரியாக அடித்தனர்.

அதேபோல் மைதானத்திற்கு வெளியேயும் வாய்ச் சவடால் பேசிய பாகிஸ்தான் ரசிகர்களை அவர்கள் வெளுத்து வாங்கியதால் சார்ஜா மைதானம் போர்க்களமாக காட்சியளித்தது. அத்துடன் தங்களது நாட்டில் கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு தங்களிடமே அவ்வாறு நடந்து கொள்ளும் உங்களுக்கு சூப்பர் ஸ்டார்கள் என்ற நினைப்பா? என முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஜாவித் மியாண்டட் காலத்திற்கும் அடிமையாகவே இருக்க வேண்டும் என்ற வகையில் விமர்சித்தார்.

அந்த மறக்க முடியாத நிகழ்வு நடைபெற்று சில நாட்கள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் தற்போது பாகிஸ்தானை பந்தாடிய இலங்கையின் வெற்றியை தங்களது வெற்றியாக ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் தெருக்களில் இறங்கி கொண்டாடித் தீர்க்கிறார்கள். குறிப்பாக தலைநகர் காபூலில் இரவு 12 மணிக்கு வீதிகளில் இறங்கி பாகிஸ்தானின் தோல்வியை கொண்டாடிய ஆப்கானிஸ்தான் ரசிகர்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

Advertisement