யுவ்ராஜ், ரெய்னா ஆகியோர் செய்ததை தற்போது வாஷிங்க்டன் சுந்தர் செய்கிறார் – மனதார பாராட்டிய வாசிம் ஜாபர்

Wasim-Jaffer-and-Sundar
Advertisement

அண்மையில் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஹார்டிக் பாண்டியாவின் தலைமையில் கைப்பற்றியது. அதே வேளையில் ஷிகார் தவான் தலைமையிலான இந்திய ஒருநாள் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் தவறவிட்டது. இருப்பினும் இந்த ஒருநாள் தொடரில் மீண்டும் அணிக்கு திரும்பியிருந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Washington Sundar.jpeg

அந்த வகையில் இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் 16 பந்துகளை சந்தித்து 37 ரன்கள் குவித்து அதிரடி காட்டிய வாஷிங்டன் சுந்தர் மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி 121 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த போது களத்திற்கு வந்து 64 பந்துகளை சந்தித்து 51 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இப்படி இந்த இரண்டு போட்டிகளிலும் வித்தியாசமான சூழ்நிலையில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் தனது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அவரது இந்த சிறப்பான பேட்டிங் பலரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளதோடு மட்டுமின்றி பாராட்டுகளை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தரை சேர்ப்பதில் கவனத்தைக் கொள்ளுங்கள் என்று தனது கருத்தினை வெளிப்படையாக பகிர்ந்து அவரை பாராட்டியுள்ளார்.

Washington-Sundar

இது குறித்து அவர் கூறுகையில் : கேள்விகளுக்கு இடமின்றி வாஷிங்டன் சுந்தர் மிகச் சிறப்பான ஆட்டத்தை இந்த நியூசிலாந்து தொடரில் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு இளம் வீரர் காயத்திலிருந்து மீண்டு வந்து இப்படி சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுவது என்பது கடினமான ஒன்று. ஆனால் அதனை மிகவும் திறம்பட வாஷிங்டன் சுந்தர் செய்து காட்டியுள்ளார். பேட்டிங்கில் தற்போது தனது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள அவர் பந்துவீச்சிலும் பவர்பிளே ஓவர்களில் அசத்தலாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

இப்படி பேட்டிங் மற்றும் பவுலிங் என தன் தரத்தை உயர்த்திக் கொண்டுள்ள சுந்தர் நிச்சயம் அடுத்த ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்பதை என்னுடைய கருத்து என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : முந்தைய ஆண்டுகளில் இந்திய அணியை நீங்கள் கவனித்தீர்கள் என்றால் சேவாக், சச்சின், யுவராஜ் சிங், ரெய்னா, கங்குலி போன்ற வீரர்கள் பேட்டிங் செய்ததோடு மட்டுமின்றி பந்துவீச்சிலும் இந்திய அணிக்கு பகுதிநேரமாக கை கொடுத்தனர்.

இதையும் படிங்க : அந்த ரமீஸ் ராஜா எங்க? சொந்த வாரிய தலைவரையே திட்டி தீர்க்கும் முன்னாள் பாக் வீரர்கள் – ரசிகர்கள், காரணம் இதோ

அந்த வகையில் தற்போதுள்ள இந்திய அணியில் ஜடேஜா மற்றும் பாண்டியா ஆகியோரை தொடர்ந்து வாஷிங்டன் சுந்தரும் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே இந்திய அணிக்கு பங்களிப்பை வழங்க கூடியவர். எனவே அடுத்த ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இவரை தேர்வு செய்ய அணி நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வாசிம் ஜாபர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement