அந்த ரமீஸ் ராஜா எங்க? சொந்த வாரிய தலைவரையே திட்டி தீர்க்கும் முன்னாள் பாக் வீரர்கள் – ரசிகர்கள், காரணம் இதோ

PAK Ramiz Raja
- Advertisement -

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக டிசம்பர் 1ஆம் தேதியன்று ராவல்பிண்டி நகரில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த இங்கிலாந்து இது டெஸ்ட் போட்டி என்பதை மறந்து விட்டு முதல் ஓவரிலிருந்தே அதிரடி சரவெடியான பவுண்டரிகளை பறக்க விட்டு மிரட்டலாக ரன்களை சேர்த்தது. குறிப்பாக 233 ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் பென் டன்கட் சதமடித்து 107 (110) ரன்களும் ஜாக் கிராவ்லி சதமடித்து 122 (111) ரன்களும் விளாசி அவுட்டானார்கள்.

அவருக்குப் பின் வந்த ஜோ ரூட் 23 ரன்னில் அவுட்டாகி சென்றாலும் மற்றொரு வீரர் ஓலி போப் தனது பங்கிற்கு சதமடித்து 108 (104) ரன்களும் ஹரி ப்ரூக் சதமடித்து 101* (81) ரன்களும் எடுத்ததால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 506/4 ரன்கள் எடுத்தது. இருப்பினும் 506 ரன்களை எடுத்த இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் நாளிலேயே 500 ரன்களை எடுத்த முதல் அணி என்ற உலக சாந்தனையும் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற உலக சாதனையும் படைத்தது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற 2வது நாளில் சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் ஹரி ப்ரூக் 153, கேப்டன் ஸ்டோக்ஸ் 41, லிவிங்ஸ்டன் 9 என முக்கிய வீரர்களை விரைவாக அவுட் செய்து 657 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது.

- Advertisement -

ரமீஸ் ராஜாவ பாத்திங்களா:
முன்னதாக உலக தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட அணி என்று கருதப்படும் பாகிஸ்தான் பவுலர்களை லோக்கல் பவுலர்களாக இங்கிலாந்து அடித்து நொறுக்கியது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. அந்தளவுக்கு இப்போட்டி நடைபெற்ற ராவல்பிண்டி மைதான பிட்ச் தார் ரோட் போல் வேகம், பவுன்ஸ், சுழல் என எதற்குமே கை கொடுக்காமல் சீராக ஒரே வேகத்தில் இருந்தது பாகிஸ்தானுக்கு அதன் சொந்த மண்ணில் பெரிய அவமானத்தை ஏற்படுத்தியது. அதனால் அமித் மிஸ்ரா போன்ற நிறைய முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் தார் ரோட் போல அமைக்கப்பட்ட பிட்ச்சை சமூக வலைத்தளங்களில் கலாய்த்தார்கள்.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 24 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் ஆஸ்திரேலியா விளையாடிய தொடரிலும் இதே போல் தார் ரோட் பிட்ச் அமைக்கப்பட்டிருந்தது அனைவரையும் கலாய்க்க வைத்தது. குறிப்பாக கராச்சி மைதான பிட்ச் சுமாராக இருந்தது என மதிப்பீட்ட ஐசிசி அதற்கு ஒரு கருப்பு புள்ளியையும் தண்டனையாக கொடுத்தது. அப்போது புதிய பாகிஸ்தான் வாரிய தலைவராக பொறுப்பேற்றிருந்த ரமீஸ் ராஜா அடுத்த தொடருக்குள் நாடு முழுவதும் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சாதகமாக இருக்கும் வகையில் அனைத்து மைதானங்களிலும் தரமான பிட்ச்கள் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

- Advertisement -

ஆனால் வாயில் மட்டும் பேசிய அவர் அதை செயலில் காட்டத் தவறியதால் ரமீஸ் ராஜா எங்கே என்று நிறைய பாகிஸ்தான் ரசிகர்களே சமூக வலைதளங்களில் அவரை தேடிச் சென்று கலாய்க்கிறார்கள். குறிப்பாக காலம் காலமாக வேகத்துக்கு பெயர் போன ராவல்பிண்டி மைதானத்தில் வளர்ந்து உலகையே ஒரு மிரட்டி “ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்” என்று பெயர் வாங்கிய சோயப் அக்தர் தனது ஊரில் இப்படி ஒரு பிட்ச் அமைக்கப்பட்டதால் கடும் ஏமாற்றமடைந்து ட்விட்டரில் விமர்சித்தது பின்வருமாறு.

“இதை விட சிந்து சமவெளி நாகரிக சாலைகள் அனேகமாக ஜூஸியாகவும் அதிக உயிர்களைக் கொண்டிருந்ததாகவும் இருக்கலாம்” என்று வெளிப்படையாகவே தார் ரோட் பிட்ச் அமைக்க முக்கிய காரணமாக இருந்த பாகிஸ்தான் வாரியத்தையும் அதன் தலைவர் ரமீஷ் ராஜாவையும் கலாய்த்தார்.

அவரைப் போலவே கடும் ஏமாற்றமடைந்துள்ள நிறைய பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் ஊடக நட்சத்திரங்களும் ரமீஸ் ராஜாவை கடுமையாக ட்விட்டரில் விமர்சித்து வருகிறார்கள். இத்தனைக்கும் இந்த அனைத்து கொடுமைகளையும் ராவல்பிண்டி மைதானத்தில் நேரடியாக இருந்து கலங்கிய கண்களுடன் பார்த்த ரமீஸ் ராஜா அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் கூலிங் க்ளாஸ் கண்ணாடி போட்டு கொண்டு இப்போட்டியை கூலாக பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement