ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பை இதற்கு முந்தைய தொடர்களை வித்தியாசமானதாகவும் பெரியதாகவும் நடக்கிறது என்றே சொல்லலாம். ஏனெனில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த டி20 உலகக் கோப்பையில் தான் மொத்தம் 20 அணிகள் விளையாடுகின்றன.
அத்துடன் அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலமாக இல்லை. எனவே அங்கே கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதற்காக வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த ஐசிசி தொடர் அமெரிக்காவிலும் நடைபெறுகிறது. அங்கே புதிய மைதானங்கள் 3 மாதத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் புதிய அனுபவமாக இருக்கிறது.
விஸ்டனின் விமர்சனம்:
இந்நிலையில் இந்த உலகக் கோப்பை முழுவதுமாக இந்தியாவுக்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் நூற்றாண்டு பழமை வாய்ந்த விஸ்டன் பத்திரிகை விமர்சித்துள்ளது. முதலாவதாக அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி ஒன்று இரவு 8 மணிக்கு அல்லது அதிகாலை 6 மணிக்கு துவங்கும் வகையில் ஐசிசி அட்டவணையை வடிவமைத்துள்ளதாக விஸ்டன் பத்திரிக்கை குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்குவதால் வெஸ்ட் இண்டீஸ் உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு போட்டி தூங்குவதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. அதன் காரணமாக அப்போட்டிகளில் பனியின் தாக்கம் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளதாக அந்த பத்திரிகை விமர்சித்துள்ளது. அதைத்தொடர்ந்து கயானாவில் நடைபெறும் செமி ஃபைனலுக்கு ரிசர்வ் டே கிடையாது என்று ஏற்கனவே ஐசிசி அறிவித்துள்ளது.
அத்துடன் ஒருவேளை இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றால் அந்த போட்டியில் தான் விளையாட வேண்டும் என்றும் ஏற்கனவே ஐசிசி அறிவித்துள்ளது. அதற்கான காரணம் என்னவெனில் அதிகாலை 6 மணிக்கு இந்தியா செமி ஃபைனலில் விளையாடினால் அதை இந்தியாவில் உள்ள ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள். அதனால் இரவு 8 மணிக்கு கயானாவில் நடைபெறும் செமி ஃபைனலில் இந்தியா விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தங்களுடைய செமி ஃபைனல் நடக்கும் மைதானத்தை முன்கூட்டியே இந்தியா தெரிந்து கொண்டுள்ளதாக விஸ்டன் விமர்சித்துள்ளது. அதைப் பார்த்த முன்னாள் இந்திய வீரர் வாஷிம் ஜாபர் அந்த பத்திரிக்கைக்கு ட்விட்டரில் கொடுத்த பதிலடி பின்வருமாறு. “நீங்கள் எங்கே செமி ஃபைனலில் விளையாடப் போகிறீர்கள் என்று தெரிந்து கொள்வது ஒரு விஷயம். அதற்கு நீங்கள் தகுதி பெறுவீர்களா என்பது மற்றொரு விஷயம்”
இதையும் படிங்க: விராட் கோலி டாப்பரா இருப்பாரு.. டி20 உ.கோ ஃபைனலில் இந்தியாவுடன் மோதும் அணிகளை கணித்த யுவராஜ் சிங்
“எடுத்துக்காட்டாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் எப்போதுமே இங்கிலாந்தில் நடைபெறுகிறது. ஆனால் இங்கிலாந்து அணி அதற்கு எப்போதும் தகுதி பெற்றதில்லை” என்று நெத்தியடி பதிலை கொடுத்துள்ளார். அதாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் எப்போதுமே இங்கிலாந்தில் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. ஆனால் 2021, 2023 ஃபைனலுக்கு இங்கிலாந்து தகுதி பெறாதது குறிப்பிடத்தக்கது.



