இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அத்தொடருக்கு முன்பாக ரோஹித், விராட் உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வு பெற்றார்கள். அதன் காரணமாக இத்தொடரில் கில் தலைமையிலான இளம் இந்திய அணி 3 – 1 என்ற கணக்கில் தோல்வியை சந்திக்கும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் ஆரம்பத்திலேயே கணித்தார்.
அதற்கேற்றார் போல் முதல் போட்டியிலேயே 5 சதங்கள் அடித்தும் தோல்வியை சந்தித்த முதல் அணியாக இந்தியா பரிதாப உலக சாதனை படைத்தது. ஆனால் அடுத்தப் போட்டியில் இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. குறிப்பாக கேப்டன் கில் மட்டும் 430 ரன்களை விளாசி பல சாதனைகளை புரிந்து வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் மிகப்பெரிய சாதனை வெற்றியைப் பதிவு செய்ய முக்கிய பங்காற்றினார்.
வாகன் முகத்தில் கரி:
ஆனால் 3வது போட்டியில் இந்தியா மிகவும் போராடி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதே போல 4வது போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்க வேண்டிய இந்தியா போராடி டிரா செய்தது. அப்போதும் கடைசி போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்து 3 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து கட்சிதமாக கோப்பையை வெல்லுமென மைக்கேல் வாகன் தெரிவித்தார்.
அதற்கு தகுந்தார் போல் 5வது போட்டியின் கடைசி நாளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு வெறும் 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதனால் கண்டிப்பாக இந்தியா தோல்வியை சந்திக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். அப்போது “மதிய வணக்கம் வாஷிங் ஜாபர், நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என ஆகஸ்ட் 3ஆம் தேதி மைக்கேல் வாகன் கிண்டலாக ட்விட்டரில் பதிவிட்டார்.
பவுண்டரி கவுண்ட்:
அதாவது கடைசி நாளில் இந்தியாவை தோற்கடித்து இங்கிலாந்து தம்முடைய கணிப்பை நிஜமாக்கப் போவதாக வாகன் கிண்டலாக தெரிவித்தார். ஆனால் கடைசி நாளில் நெருப்பாக பவுலிங் செய்த இந்தியா 28 ரன்கள் மட்டும் கொடுத்து எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் எடுத்தது. அதனால் வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்த இந்தியா 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையை பகிர்ந்து கொண்டது.
இதையும் படிங்க: அம்பயர்கள் செய்த இந்த தவறால் தான் இங்கிலாந்து அணி தோற்றது.. நாசர் ஹுசேன் விளாசல் – விவரம் இதோ
மேலும் தோல்வியை சந்திப்பீர்கள் என்று கணித்த மைக்கேல் வாகன் முகத்தில் இளம் இந்திய அணி கரியை பூசியுள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் “பஸ்பால் அடி வாங்குவதை (கட்டிலில்) படுத்துக்கொண்டே பார்க்கிறேன், நீங்கள் என்ன செய்கிறீர்கள்? தொடர் சமனில் முடிந்தாலும் 2019 உலகக்கோப்பை போல இந்தியா பவுண்டரி அடிப்படையில் கோப்பையை வென்றது” என்று மைக்கேல் வாகனுக்கு புகைப்படத்துடன் வாசிம் ஜாபர் பதிலடி கொடுத்துள்ளார்.



