இலங்கைக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா இழந்தது. குறிப்பாக முதல் போட்டியை சமன் செய்த இந்தியா அதற்கடுத்த 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. அதனால் 27 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக இலங்கைக்கு எதிராக ஒரு இருதரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா பரிதாபமாக தோற்றது.
அத்துடன் 14 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக இலங்கைக்கு எதிராக அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இத்தனைக்கும் இலங்கையை விட தரமான வீரர்களை கொண்டிருக்கும் இந்தியா ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக திகழ்கிறது. அப்படி இருந்தும் சுழலுக்கு சாதகமான கொழும்பு மைதானத்தில் இலங்கை ஸ்பின்னர்களிடம் இந்திய பேட்ஸ்மேன்கள் சுமாராக விளையாடியது தோல்விக்கு காரணமானது.
தக்க பதிலடி:
அதனால் இலங்கை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்தியாவை கலாய்த்து தள்ளினர். அதற்கு “சாதாரண இருதரப்பு தொடரில் எங்களை தோற்கடிக்க 27 வருடங்கள் தேவைப்பட்டதே” என்று இலங்கை ரசிகர்களுக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் இந்திய ரசிகர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளித்து உரையாடினார்.
அப்போது அவரிடம் வம்படியாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் இலங்கை தொடரில் இந்தியா சந்தித்த தோல்வி பற்றி கேள்வி எழுப்பி கிண்டலடித்தார். இது பற்றி மைக்கேல் வாகன் பதிவிட்டது பின்வருமாறு. “ஹாய் வாசிம். இலங்கைக்கு எதிரான சமீபத்திய ஒருநாள் தொடரில் உங்களுடைய முடிவு என்ன? நான் கொஞ்சம் வெளியே இருந்ததால் அதை பார்க்காமல் தவற விட்டு விட்டேன். அது நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்” என பதிலளித்தார்.
அதற்கு வாஷிம் ஜாபர் பதிலளித்தது பின்வருமாறு. “இதை உங்களுக்கு ஆஷஸ் தொடரை வைத்து புரியும் படி சொல்கிறேன் மைக்கேல். அந்த தொடரில் கடந்த 12 வருடங்களாக ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து பெற்ற வெற்றிகளை இந்தியாவும் பெற்றது” என்று கூறியுள்ளார். அதாவது கடந்த 12 வருடங்களாக சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் வெல்லவில்லை.
இதையும் படிங்க: கனடாவில் அம்பயரிடம் திமிர்தனத்தை காட்டிய ஷாகிப்.. வெற்றியை எதிரணிக்கு கொடுத்த அம்பயர்.. நடந்தது என்ன?
அதே போல இலங்கை ஒருநாள் தொடரில் இந்திய அணி வெற்றி பெறவில்லை என்று மைக்கேல் வாகனுக்கு மூக்கை உடைக்கும் வாசிம் ஜாபர் பதிலடி கொடுத்துள்ளார். கடந்த காலங்களில் பலமுறை இப்படி இந்தியாவை கலாய்க்கும் வகையில் மைக்கேல் வாகன் பேசியுள்ளார். அப்பதெல்லாம் இதே போல அவருக்கு வாசிம் ஜாபர் பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.