உலகம் முழுவதிலும் ஏராளமான பிரிமியர் லீக் டி20 தொடர்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அவை அனைத்துக்கும் இந்தியாவின் நடைபெறும் ஐபிஎல் முன்னோடியாக பார்க்கப்படுகிறது. 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் தொடரால் ஒரே சமயத்தில் 2 அணிகளை களமிறக்கும் அளவுக்கு இந்தியாவுக்கு ஏராளமான தரமான இளம் வீரர்கள் கிடைத்து வருகிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் தொடரால் கோடிக்கணக்கான ரூபாய்களை வருமானமாக ஈட்டும் பிசிசிஐ உலகிலேயே நம்பர் ஒன் கிரிக்கெட் வாரியமாக உருவெடுத்துள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்களும் ஐபிஎல் தொடரில் வாய்ப்புகளையும் கோடிக்கணக்கில் சம்பளங்களையும் வாங்கி வளர்ந்து வருகிறார்கள். அதைப் பார்த்து பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உட்பட அனைத்து வெளிநாடுகளும் தங்களுக்கென்று பிரீமியர் லீக் டி20 தொடரை நடத்தி வருகின்றன.
குழந்தையே வளந்துரும்:
ஆனால் அந்தத் தொடர்களால் ஐபிஎல் தொடரின் உச்சத்தை நெருங்க கூட முடியவில்லை என்பதே நிதர்சனமாகும். இருப்பினும் அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் மட்டும் ஐபிஎல் தொடரை விட தங்களுடைய பிஎஸ்எல் தான் சிறந்தது என்று மார் தட்டுவது வழக்கமாகும். இந்நிலையில் சுமார் 3 மாதங்கள் நடைபெறும் ஐபிஎல் தொடர் அலுப்புத் தட்டுவதாக பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பந்து வீச்சை பொறுத்த வரை ஐபிஎல் தொடரை விட பிஎஸ்எல் சிறந்த தொடராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி வாசிம் அக்ரம் பேசியது பின்வருமாறு. “குழந்தை வளர்ந்தாலும் அந்த லீக் தொடர் முடிவதில்லை. பிஎஸ்எல் தொடரின் சிறந்த அம்சம் என்னவெனில் அது 34 – 35 நாட்களில் முடிந்து விடுகிறது. அதனால் வெளிநாட்டு வீரர்கள் குறைவான நாட்களில் விளையாடுவதை விரும்புகிறார்கள்”
கலாய்த்த அக்ரம்:
“வெளிநாட்டு வீரர்கள் 35 – 40 நாட்களுக்குள் முடியும் பிஎஸ்எல் தொடருக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். ஆனால் வேறு சில தொடர்கள் 2.5 – 3 மாதங்கள் நடைபெறுகிறது. அது அனைவருக்கும் நீளமாக இருக்கிறது. அதைப் பார்த்து நான் கூட அலுப்புத் தட்டிப் போகிறேன். எடுத்துக்காட்டாக பிக்பேஷ் தொடரை எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் ஆரம்பத்தில் அதை இரண்டரை மாதங்கள் நடத்தினார்கள்”
இதையும் படிங்க: ஹைதராபாத் டீம்ல பாத்துருக்கேன்.. பெரிய விக்கெட்டான அபிஷேக் அதிரடிக்கு இதான் காரணம்.. மார்க்ரம் பேட்டி
“ஆனால் அது வேலையாகாது என்பதை 4 – 5 வருடங்கள் கழித்து அவரகள் உணர்ந்ததால் தற்போது 40 நாட்களாக குறைந்துள்ளனர். அதுவே பிஎஸ்எல் தொடரின் அழகாகும். வெளிநாட்டு வீரர்களிடம் நான் பேசும் போது அவர்கள் ஐபிஎல் தொடரில் பந்து வீசுவதற்கும் மற்ற தொடர்களில் பந்து வீசுவதற்கும் உள்ள வித்தியாசத்தைப் பேசுகின்றனர் திறமையின் அடிப்படையில் அவர்கள் பிஎஸ்எல் நம்பர் ஒன் தொடர் என்று சொல்கிறார்கள். ஏனெனில் எங்களிடம் எண்ணிக்கையை விட அதிக தரம் இருக்கிறது” என்று கூறினார்.



