ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150க்கு ஆல் அவுட்டானது. ஆனால் அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியாவை அபாரமாக பந்து வீசிய இந்தியா 104க்கு சுருட்டி வீசியது.
பின்னர் 487-6 ரன்கள் குவித்த இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை 238க்கு சுருட்டி அபார வெற்றி பெற்றது. அதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் ரன்கள் அடிப்படையில் தங்களுடைய பெரிய வெற்றியை பதிவு செய்து இந்தியா சாதனை படைத்தது. அந்த வெற்றிக்கு பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் 161, விராட் கோலி 100*, ராகுல் 77 ரன்களும் கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா 8 விக்கெட்டுகளும் எடுத்து முக்கிய பங்காற்றினார்கள்.
மிரட்டிய இந்தியா:
அந்த வெற்றியால் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் சந்தித்த தோல்வியிலிருந்து கம்பேக் கொடுத்த இந்தியா குறைத்து மதிப்பிட்ட ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுத்துள்ளது. இந்நிலையில் உலகிலேயே இயற்கையாக அதிகப்படியான பவுன்ஸ் நிறைந்த பெர்த் நகரில் இந்தியா மிகப்பெரிய வெற்றியை பெற்றதாக பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார்.
குறிப்பாக பாகிஸ்தான் உள்ளிட்ட மற்ற ஆசிய அணிகள் இப்படி ஒரு வெற்றியை பெற்று தாம் பார்த்ததில்லை என்று அவர் பாராட்டுகிறார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெல்லும் என்று நான் நினைக்கவே இல்லை. இது இந்திய அணியின் மிகப்பெரிய சாதனை. அது இந்திய அணிக்கு மட்டுமின்றி இந்திய திட்டத்தைச் சேர்ந்த அனைவருக்கும் பெரிய வெற்றி”
வாழ்த்திய அக்ரம்:
“நம்மால் எந்த அணியையும் தோற்கடிக்க முடியும் என்ற முழுமையான தன்னம்பிக்கையை இந்தியா கொண்டுள்ளது. பெர்த்தில் 40 வருடங்களில் ஒரு ஆசிய அணி இப்படி விளையாடி வென்று நான் பார்ப்பது முதல் முறையாகும். இந்தியாவை தவிர்த்து அதை யாரும் செய்யவில்லை. சொல்லப்போனால் அவர்கள் ஒருதலைப்பட்சமாக வென்றதால் இந்திய அணியில் எந்த பிரச்சனையும் இல்லை”
இதையும் படிங்க: 2025இல் விராட் கோலி சர்ப்ரைஸ் தரப்போறாரு.. ஆர்சிபி அணியில் இந்த வீக்னெஸ் இருக்கு.. ஏபிடி கருத்து
“அதிலும் முதல் இன்னிங்ஸில் சரிவை சந்தித்த பின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் செய்த விதம் அபாரமாக இருந்தது. வேறு ஆசிய அணிகள் இப்படி செயல்பட்டு நான் பார்த்ததில்லை. எனவே இந்திய அணிக்கும் அவர்கள் வளர்ச்சிக்கு நீண்ட காலமாக உதவி வருபவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்று கூறினார். இதை அடுத்து இரண்டாவது போட்டி அடிலெய்ட் நகரில் நடைபெற உள்ளது.