இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. அப்போட்டியில் 8 விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
2016இல் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் பும்ரா தனித்துவமான பவுலிங் ஆக்சனை கொண்டுள்ளார். அதை பயன்படுத்தி எதிரணிகளை திணறடிக்கும் அவர் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.
அசத்தும் பும்ரா:
அந்த வகையில் வித்தியாசமாக பந்து வீசும் அவரை எதிர்கொள்வது கடினம் என்று எதிரணி பேட்ஸ்மேன்களே வெளிப்படையாக பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் பந்தை வெள்ளைக் கோட்டிலிருந்து பும்ரா 40 சென்டிமீட்டர் முன்னதாக கையில் இருந்து விடுவதாக பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். அதனால் பந்து தரையில் பட்டதும் சறுக்கிக்கொண்டு அதிகப்படியான வேகத்தில் வருவதாக அவர் கூறியுள்ளார்.
அதனாலேயே மற்ற பவுலர்களை காட்டிலும் அவரை எதிர்கொள்வது கடினமாக இருப்பதாக வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “பும்ராவின் பந்து வீச்சு கை பின்னால் இருந்து வருகிறது. பஞ்சாபியில் நாம் கூறுவது போல அந்த மிகை நீட்டிப்பு காரணமாக இறுதியில் பந்து அவருடைய மணிக்கட்டில் இருந்து “துங்கா” பிலிக் போல வருகிறது”
கடினமான பும்ரா:
“குறிப்பிட்ட பிட்ச்களில் அது ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் எதிர்பார்க்காத வகையில் பந்தை சறுக்குகிறது. மேலும் பந்து குறைவான உயரத்தில் வருவதால் பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ள தடுமாறுகிறார்கள். அது இயற்கையானது. இறுதியில் மணிக்கட்டை ஃப்ளிக் செய்வது மிகவும் கடினம். மேலும் பும்ரா பந்தை ரிலீஸ் செய்யும் இடம் கிட்டத்தட்ட 40 சென்டி மீட்டர் முன்னே இருக்கிறது”
இதையும் படிங்க: எங்க வந்த யார்கிட்ட.. 42க்கு ஆல் அவுட்.. ஓடவிட்ட தெ.ஆ.. இந்தியாவை கலாய்த்த இலங்கை மோசமான சாதனை
“அது மற்றவர்களை காட்டிலும் இந்த வேகத்துக்கு பெரிய வித்தியாசம். அதனாலேயே அவருடைய பந்துகள் தரையில் பட்டதும் சறுகிக்கொண்டு செல்கிறது” என்று கூறினார். அவர் கூறுவது போல பெரும்பாலான பவுலர்கள் 10 சென்டிமீட்டர் மட்டுமே வெள்ளைக் கோட்டுக்கு வெளியே பந்தல் ரிலீஸ் செய்வார்கள். ஆனால் பும்ரா 34 – 40 சென்டிமீட்டர் அளவுக்கு முன்பாக பந்தை விடுவதால் எதிர்கொள்வது சவாலாக இருக்கிறது.



