தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது இளம் கிரிக்கெட் வீரரான வாஷிங்டன் சுந்தர் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 12 ஒருநாள் போட்டிகள், 32 டி20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் தொடர்ச்சியாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் ஏற்கனவே காயம் காரணமாக ஆசியக் கோப்பை, டி20 உலக கோப்பை தொடர் என முக்கிய தொடர்களை தவறவிட்ட வாஷிங்டன் சுந்தர் தற்போது காயத்தில் இருந்து மீண்டு நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான தொடர் என இரண்டிலுமே பந்துவீச்சு மட்டுமின்றி, பேட்டிங்கிலும் இந்திய அணிக்கு கை கொடுத்தார்.
அதிலும் குறிப்பாக பங்களாதேஷில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் பாண்டியா, ஜடேஜா போன்ற முன்னணி ஆல்ரவுண்டர்கள் இல்லாத வேளையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திய சுந்தர் பேட்டிங்கிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டினையும் பெற்றிருந்தார். இந்நிலையில் தான் எப்படிப்பட்ட கிரிக்கெட் வீரராக வரவேண்டும் என்பது குறித்து வாஷிங்டன் சுந்தர் தற்போது மனம் திறந்த பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

எனக்கு சமீப காலமாகவே கிடைத்துவரும் வாய்ப்புகள் மிக முக்கியமானவை என்று நினைக்கிறேன். அடுத்த ஆண்டு இந்தியாவில் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை நடைபெற இருக்கிறது. அந்த வேளையில் அணி எந்த இடத்தில் என்னை களம் இறக்கினாலும் அந்த இடத்தில் என்னை தகவமைத்து விளையாடக்கூடிய ஒரு வீரராக நான் மாற வேண்டும் என பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன்.
கடந்த காலங்களில் இந்திய அணிக்காக யுவராஜ், ரெய்னா போன்றோர் வெவ்வேறு இடங்களில் களமிறங்கினாலும் மிகச்சிறப்பான பங்களிப்பை இந்திய அணிக்கு வழங்கினார்கள். அவர்களை போன்றே நானும் எந்த இடத்தில் இறங்கினாலும் இந்திய அணியின் வெற்றிக்கு பங்களிக்க கூடிய ஒரு வீரராக வளர வேண்டும் என்று விரும்புகிறேன்.
இதையும் படிங்க : இஷான் கிஷன் இந்திய அணிக்கு அறிமுகம் ஆவதற்கு முன்பே தோனி – என்ன சொன்னாரு தெரியுமா?
அடுத்த ஆண்டு உலக கோப்பை தொடருக்கு முன்னதாக 10 முதல் 15 போட்டிகள் மட்டுமே இருக்கும் என்று நினைக்கிறேன். அப்படி அந்த போட்டிகளில் எல்லாம் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் என்னுடைய முழு திறனையும் வெளிப்படுத்தி விளையாட இருக்கிறேன் என வாஷிங்டன் சுந்தர் கூறியது குறிப்பிடத்தக்கது.



