2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலமானது டிசம்பர் இரண்டாம் வாரம் நடைபெறயிருக்கும் வேளையில் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து விடுவிக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும், தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும் வெளியிட வேண்டும் என ஏற்கனவே ஐபிஎல் நிர்வாகம் கெடு விதித்திருந்தது. இதன் காரணமாக இன்னும் சில தினங்களில் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கப்போகும் மற்றும் வெளியேற்றப் போகும் வீரர்களின் பட்டியலை வெளியிடும் என்று தெரிகிறது.
வாஷிங்டன் சுந்தர் சி.எஸ்.கே அணிக்கு வருவாரா? :
அதற்கு முன்னதாக வீரர்களின் டிரேடிங் முறையும் நடைமுறையில் உள்ளதால் ஒரு சில நட்சத்திர வீரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இடம் மாறுவார்கள் என்றும் பேசப்பட்டு வந்தது. அதிலும் குறிப்பாக நட்சத்திர வீரர்கள் சிலர் டிரேடிங் செய்ய வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வந்த நிலையில் குஜராத் அணியிலிருந்து தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் சி.எஸ்.கே அணிக்காக டிரேடிங் முறையில் கொண்டுவரப்படுவார் என்று பேசப்பட்டது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது.
ஏனெனில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள சி.எஸ்.கே அணியானது இந்த ஆண்டு மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் அந்த அணியில் இருந்து ஓய்வு பெற்று வெளியேறிய அஸ்வினுக்கு பதிலாக தமிழ்நாட்டை சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.
அப்படி குஜராத் அணியிலிருந்து அவர் சென்னை அணிக்கு வரும் பட்சத்தில் நிச்சயம் சிஎஸ்கே அணிக்கு அவரது வருகை பலம் சேர்க்கும் வகையில் அமையும் என்று பலரும் கூறியிருந்தனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்றாவது டி20 போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 49 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற வேளையில் அவர் சிஎஸ்கே அணிக்கு வருவது உறுதி தானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆனால் தற்போது வரை வெளிவந்த தகவலின் படி : குஜராத் டைட்டன்ஸ் அணி வாஷிங்டன் சுந்தரை சென்னை அணிக்கு அனுப்ப முன்வரவில்லை என்று தெரிகிறது. ஏனெனில் குஜராத் அணியின் தலைமை பயிற்சியாளரான ஆஷிஷ் நெஹ்ரா தமிழக வீரர்கள் மீது ஏகப்பட்ட நம்பிக்கையை வைத்துள்ளார். அதன் காரணமாகவே குஜராத் அணியில் சாய் சுதர்சன், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் போன்ற திறமையான வீரர்கள் உள்ளனர்.
இதையும் படிங்க : மீண்டும் ஐ.பி.எல் அணியின் கேப்டனாகும் கே.எல் ராகுல்.. எந்த அணிக்கு தெரியுமா? – விவரம் இதோ
மற்ற வீரர்களை காட்டிலும் சில கோடிகளில் மட்டுமே அவர்கள் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக வாங்கப்பட்டாலும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர்களை வெளியேற்ற ஆஷிஷ் நெஹ்ரா விரும்ப மாட்டார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக வாஷிங்டன் சுந்தர் சி.எஸ்.கே அணிக்கு வருவது கடினம் என்றே தெரிகிறது.



