இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் 20-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான முதன்மை இந்திய அணியில் இரண்டு தமிழக வீரர்களாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இதில் வாஷிங்டன் சுந்தர் ஆல்ரவுண்டராகவும், சாய் சுதர்சன் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் இடம் பிடித்துள்ளனர். இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் நிச்சயம் டாப் ஆர்டரில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாய் சுதர்சனின் வளர்ச்சி அபரிவிதமானது : வாஷிங்டன் சுந்தர்
ஏனெனில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்து மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கும் சாய் சுதர்சன் நல்ல பேட்டிங் டெக்னிக்கை வைத்திருப்பதால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் உடனடியாக அறிமுகமாக வேண்டும் என்ற ஆதரவு குவிந்து வருகிறது. இதன் காரணமாக இங்கிலாந்து தொடரில் நிச்சயம் அவர் அறிமுகமாகி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில் மற்றொரு வீரரான வாஷிங்டன் சுந்தருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைப்பது சற்று கடினம் என்றே தெரிகிறது. ஏனெனில் இங்கிலாந்து மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்காது என்பதனால் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளருடனே இந்திய அணி செல்ல அதிக வாய்ப்புள்ளது. அந்த வகையில் பார்க்கையில் ரவீந்திர ஜடேஜா முதன்மை தேர்வாக இருப்பார் எனவே வாஷிங்டன் சுந்தர் பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பது சற்று சிரமம் தான்.
இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக நடைபெற்ற ஒரு பிரத்யேக நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட வாஷிங்டன் சுந்தர் சக வீரரான சாய் சுதர்சனின் வளர்ச்சி குறித்து வெளிப்படையாக சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : என்னுடைய நெருங்கிய நண்பர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் சிலர் சாய் சுதர்சனின் வளர்ச்சி குறித்து அடிக்கடி என்னிடம் பேசிக்கொண்டே இருப்பார்கள்.
அதிலும் குறிப்பாக சாய் சுதர்சன் தொடர்ச்சியாக மிகச் சிறப்பாக விளையாடி வருவதாகவும் மிக விரைவில் அவர் பெரிய வீரராகவும் மாறுவார் என்றும் என்னிடம் கூறிவந்தனர். கடந்த 3-4 ஆண்டுகளாகவே சாய் சுதர்சன் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளார் என்று நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு முறை நான் அவர் விளையாடுவதை பார்க்கும் போதும் அவரிடம் உள்ள திறமை எனக்கு தெரிகிறது.
இதையும் படிங்க : வாஷிங்டன் சுந்தர் தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்.. காரணம் இதுதான் – சாய் சுதர்சன் பேட்டி
அவரிடம் இருந்து நான் கற்றுக்கொள்ளவும் நிறைய விடயங்கள் இருக்கின்றன. அவருடைய பேட்டிங் டெக்னிக் மிகச் சிறப்பாக இருப்பதினால் அவரால் நீண்ட காலம் இந்திய அணியில் பயணிக்க முடியும் என்று நினைக்கிறேன். இந்திய அணிக்காக இன்னும் பல ஆண்டுகள் உலகெங்கிலும் அவர் பயணித்து விளையாட இருப்பது வளரும் தமிழக வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என வாஷிங்டன் சுந்தர் கூறியது குறிப்பிடத்தக்கது.



