இலங்கைக்கு எதிராக முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் சூரியகுமார் தலைமையில் இந்தியா எளிதாக வென்றது. அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்களுடன் இந்தியா களமிறங்கியுள்ளது. அதனால் இலங்கையை எளிதாக அடித்து நொறுக்கி இந்தியா வெல்லும் என்று அனைவரும் நினைத்தனர்.
ஆனால் முதல் போட்டியிலேயே 231 ரன்களை அடிக்க முடியாமல் தடுமாறிய இந்தியா சமன் செய்தது. 2வது போட்டியில் இன்னும் மோசமாக விளையாடிய இந்தியா 241 ரன்களை அடிக்க முடியாமல் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் டி20 தொடரில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்த இலங்கை 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை வகிக்கிறது.
பெரிய வாய்ப்பு:
மறுபுறம் 3வது போட்டியில் வென்றால் மட்டுமே 27 வருடங்களுக்குப் பின் இலங்கைக்கு எதிராக ஒரு இருதரப்பு ஒருநாள் தொடரில் சந்திக்கும் தோல்வியிலிருந்து தப்ப முடியும் என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக முதல் 2 போட்டிகளிலுமே கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் அவரைத் தவிர்த்து விராட் கோலி போன்ற மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்காதது தோல்விக்கு காரணமானது.
குறிப்பாக சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் ரோஹித்தை தவிர்த்து அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களுமே தடுமாறியது தோல்வியை கொடுத்தது. இந்நிலையில் ஐசிசி தொடருக்கு தயாராக இது போன்ற கடினமான சூழ்நிலை தங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு என்று இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார். அத்துடன் 3வது போட்டியில் வெல்வதற்கு பேட்டிங்கில் செய்ய வேண்டிய சிறிய மாற்றத்தை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தங்களிடம் கூறியுள்ளதாகவும் சுந்தர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “3வது போட்டியை வெல்வதற்கு இது எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு. தரமான பவுலிங் அட்டாக்கிற்கு எதிராக சுழலுக்கு சாதகமான சூழ்நிலைகளில் எப்படி அசத்த வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். இந்த அனுபவம் எங்களுக்கு பெரிய தொடர்களில் உதவும். சுழலுக்கு சாதகமான இந்த சூழ்நிலைகளை எப்படி ஃகவுன்டர் அட்டாக் செய்ய வேண்டும் என்பது பற்றி கௌதம் கம்பீர் நிறைய உள்ளீடுகளை வழங்கியுள்ளார்”
இதையும் படிங்க: அந்த 2 பேர் தான் அப்படின்னா நீங்களுமா? விராட் கோலியும் தடுமாற இதான் காரணம்.. பசித் அலி ஏமாற்றம்
“அவர் ஸ்பின்னர்களுக்கு எதிராக அசத்திய சிறந்த வீரர். எங்களது தந்திரோபாயத்தில் கொஞ்சம் மாற்றம் செய்ய வேண்டும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து ஜூலை 7ஆம் தேதி இலங்கைக்கு எதிரான 3வது போட்டியில் இந்தியா களமிறங்குகிறது. அதில் வென்று இலங்கைக்கு பதிலடி கொடுப்போமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.



