காயத்திலிருந்து திரும்பிய முதல் போட்டியிலேயே ஆல்-ரவுண்டராக வெற்றிபெற வைத்த தமிழக வீரர் – கவுண்டியில் சிறப்பான கம்பேக்

Washington Sundar County
- Advertisement -

இங்கிலாந்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான சாம்பியன்ஷிப் தொடரின் 2-வது பாகம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் செட்டேஸ்வர் புஜரா, நவ்தீப் சைனி, உமேஷ் யாதவ் உள்ளிட்ட இந்திய வீரர்கள் பல்வேறு அணிகளுக்காக விளையாடி வருகிறார்கள். அந்த வரிசையில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வாசிங்டன் சுந்தர் லன்க்ஷைர் அணிக்காக முதல் முறையாக கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட தொடங்கியுள்ளார். 3 வகையான இந்திய அணியிலும் விளையாடியுள்ள இவர் சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய போது துரதிஷ்டவசமாக காயத்தால் பாதியிலேயே வெளியேறினார்.

17 வயதில் 2017இல் இந்தியாவுக்காக அறிமுகமான இவர் கடந்த 4 வருடங்களில் இதேபோல் காயங்களால் நிறைய போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடும் வாய்ப்பை தவற விட்டுள்ளார். அந்த நிலைமையில் மீண்டும் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்த அவர் இம்முறை இந்திய அணிக்கு திரும்புவதற்காக நேராக இங்கிலாந்துக்கு பறந்து லன்க்ஷைர் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த நிலைமையில் ஜூலை 19-ஆம் தேதி துவங்கிய நார்த்தம்டன்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக அறிமுகமான அவர் தனது புதிய அணியின் தொப்பியை பெற்று களமிறங்கினார்.

- Advertisement -

5 விக்கெட்கள்:
அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த நார்த்தம்டன்ஷைர் தனது முதல் இன்னிங்சில் லன்க்ஷைர் அணியின் நல்ல பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு எதிராக முதல் முறையாக பந்துவீசிய வாசிங்டன் சுந்தர் சுழலுக்கு சவாலான நார்த்தம்டன் மைதானத்தில் மிகச் சிறப்பாக பந்துவீசி அதிகபட்ச ரன்கள் எடுத்த லீவிஸ் மெக்மனஸ் 61 ரன்களிலும் ராப் கேயோக் 54 ரன்களிலும் அவுட் செய்து பெரிய ரன்களை எடுக்க விடாமல் தடுத்து நிறுத்தினார்.

அத்துடன் எமிலியா கேய் 35, நியூசிலாந்தின் நம்பிக்கை நட்சத்திர வீரர் வில் எங் 2, டாம் டெய்லர் 1 என மேலும் 3 முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் அவுட் செய்து தனது அறிமுக இன்னிங்சிலேயே 5 விக்கெட்டுகளை எடுத்து அபாரமாக பந்துவீசினார். அவருடன் வில் வில்லியம்ஸ் 2, லுக் வுட் 3 என வேகப்பந்து வீச்சாளர்கள் தான் எஞ்சிய விக்கெட்டுகளை எடுத்தார்களே தவிர வேறு எந்த சுழல் பந்து வீச்சாளரும் விக்கெட்டுகளை எடுக்கவில்லை.

- Advertisement -

அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய லன்க்ஷைர் நார்த்தம்டன்ஷைர் அணியின் அனலான வேகப்பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் வெறும் 132 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஜோஸ் போகன்னன் 31 ரன்களும் கீட்டன் ஜென்னிங்ஸ் 27 ரன்களும் எடுத்தனர். நார்த்தம்டன்ஷைர் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேக் வைட் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பேட்டிங்கிலும் அசத்தல்:
அதை தொடர்ந்து 103 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய நார்த்தம்டன்ஷைர் பெரிய ரன்களை எடுக்காமல் மீண்டும் லன்க்ஷைர் அணியின் துல்லியமான பந்துவீச்சில் 174 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ரிக்கல்ட்டன் 59 ரன்களும் கேரிகன் 43 ரன்களும் எடுத்தனர். 2-வது இன்னிங்சில் 8 ஓவர்கள் வீசிய வாசிங்டன் சுந்தர் 23 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகள் எடுக்காத நிலையில் அதிகபட்சமாக வில் வில்லியம்ஸ் 5 விக்கெட்டுகளும் டாம் பெய்லி 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

- Advertisement -

இறுதியில் 278 என்ற இலக்கை சவாலான பிட்ச்சில் துரத்திய லன்க்ஷைர் மீண்டும் பேட்டிங்கில் சொதப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போல் கீட்டன் ஜென்னிங்ஸ் 1, லுக் வேல்ஸ் 26, டேன் விலாஸ் 7, மேத்தியூ பார்க்கின்சன் 0 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி சென்றனர். இருப்பினும் 3-வது இடத்தில் களமிறங்கி நங்கூரமாக பேட்டிங் செய்த ஜோஸ் போகன்னன் 18 பவுண்டரி 1 சிக்சருடன் சதமடித்து 103 ரன்கள் விளாசி கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார்.

அதனால் 209/6 என்ற நிலைமைக்கு வந்த லன்க்ஷைர் அணியின் கைக்கு கிடைத்த வெற்றி வாய்க்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் களமிறங்கி வாசிங்டன் சுந்தர் – வில் வில்லியம்ஸ் உடன் ஜோடி சேர்ந்து மேற்கொண்டு விக்கெட்டை விடாமல் நங்கூரமாக பேட்டிங் செய்தார். 7-வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசி வரை அவுட்டாகாத இந்த ஜோடியில் வாசிங்டன் சுந்தர் 5 பவுண்டரியுடன் 34* (81) ரன்களும் வில்லியம்ஸ் 29* (107) ரன்களும் எடுத்தால் 278/6 ரன்களை எடுத்த லன்க்ஷைர் 4 விக்கெட் வித்தியாசத்தில் அருமையான வெற்றி பெற்றது.

காயத்திலிருந்து திரும்பி லன்க்ஷைர் அணிக்காக களமிறங்கிய முதல் அறிமுக கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் 5 விக்கெட்டுகளையும் முக்கியமான 34* ரன்களை எடுத்து அசத்திய வாஷிங்டன் சுந்தர் மிகச்சிறந்த கம்பேக் கொடுத்துள்ளார். இதேபோல் அடுத்து வரும் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் புஜாரா இந்திய அணிக்குள் திரும்பியதைப் போல இவருக்கும் வாய்ப்பு தாமாக தேடி வரும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement