ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் வேளையில் இந்தியாவில் ஆண்டு தோறும் அனைத்து மாநில அணிகளுக்கு மத்தியில் பிரபலமாக நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை உள்ளூர் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ரஞ்சியில் அசத்திய வாஷிங்டன் சுந்தர் :
இந்த ரஞ்சி தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தமிழக அணி தற்போது விளையாடி வருகிறது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர் சாய் சுதர்சன் இரட்டை சதத்தை அடித்து அசத்திய வேளையில் வாஷிங்டன் சுந்தரும் சதம் அடித்து அவரின் திறமையை நிரூபித்துள்ளார்.
இந்த போட்டியில் மூன்றாவது வரிசையில் களமிறங்கிய அவர் போட்டியின் சூழலை கணித்து நிலைத்து நின்று விளையாடி இந்த சதத்தை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் அஸ்வினுக்கு அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் தான் அவரது இடத்தை பிடிக்கப்போகிறேன் என்பதை அவர் செய்து காண்பித்துள்ளார்.
ஏனெனில் தற்போது 38 வயதாகும் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்னும் சில ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார். அதன்காரணமாக அவரைப்போன்ற ஆப் ஸ்பின்னர் மற்றும் பேட்டிங்கில் கை கொடுக்கக்கூடிய வீரரை பி.சி.சி.ஐ தேடி வருகிறது.
இவ்வேளையில் அந்த இடத்திற்கு சரியான மாற்றுவீரராக வாஷிங்டன் சுந்தர் இருப்பார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் ஆப் ஸ்பின்னரான அவருக்கு பேட்டிங் செய்யும் திறன் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்தாலும் பெரிய அளவில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்தது இல்லை என்ற விமர்சனம் இருந்து வந்தது.
இதையும் படிங்க : பெங்களூருவில் கனெக்சன் இருக்கா? இதை விட சிறந்த செஞ்சுரி இருக்காது.. ரச்சின், சர்பராஸை பாராட்டிய சச்சின்
இந்நிலையில் தற்போது ரஞ்சி போட்டியில் விளையாடி தனது திறனை நிரூபித்துள்ளதால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நிரூபித்துள்ளார். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி அசத்தலாக செயல்பட்ட அவருக்கு அதனை தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காத வேளையில் தற்போது விரைவில் அவர் டெஸ்ட் அணிக்கான போட்டியிலும் இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.



