IND vs SA : காயமடைந்த தீபக் சஹருக்கு பதில் இந்திய அணியில் தமிழக வீரர் சேர்ப்பு – முழுவிவரம் இதோ

Deepak Chahar IND
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் தோற்று 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. அதை தொடர்ந்து அக்டோபர் 9ஆம் தேதி ராஞ்சியில் நடைபெறும் 2வது போட்டியில் வென்றால் மட்டுமே சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரின் கோப்பையை வெல்ல முடியும் என்ற பரிதாப நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக லக்னோவில் நடைபெற்ற முதல் போட்டியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் பங்கேற்காதது நிறைய ரசிகர்களை குழம்ப வைத்தது.

அதற்கான காரணத்தை கேப்டன் மற்றும் அணி நிர்வாகம் வெளியிடாத நிலைமையில் காயத்தாலேயே அவர் பங்கேற்கவில்லை என்ற செய்திகள் இன்று வெளியாகின. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் முதுகு பகுதியில் காயத்தை சந்தித்ததால் லக்னோவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தீபக் சஹர் களமிறங்கவில்லை என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதிலிருந்து குணமடைவதற்காக தற்போது அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமிக்கு சென்றுள்ளதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மறுபடியும் காயம்:
ஏனெனில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பந்து வீச்சாளராக சாதனை படைத்த அவர் டி20 உலக கோப்பையில் விளையாடும் முதன்மை பவுலராக கருதப்பட்டார். ஆனால் 2022 ஐபிஎல் தொடருக்கு முன்பாக காயத்தை சந்தித்து 2 மாதங்கள் விலகிய அவர் அதிலிருந்து குணமடைந்து ஜிம்பாப்வே தொடரில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது வென்று கம்பேக் கொடுத்த போதிலும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்டாண்ட் பை லிஸ்டில் மட்டுமே இடம் பிடிக்க முடிந்தது.

ஏனெனில் ஹர்ஷல் படேல், அர்ஷிதீப் சிங் போன்ற இளம் வீரர்கள் ஓரளவு சிறப்பாக செயல்பட்டு உலக கோப்பையில் அவரது இடத்தை பிடித்து விட்டனர். முன்னதாக ஜிம்பாப்வே தொடரில் முதல் போட்டியில் மட்டும் பங்கேற்று விட்டு எஞ்சிய 2 போட்டிகளில் காயத்தால் பங்கேற்காத தீபக் சஹார் ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டியில் மட்டும் விளையாடியிருந்த நிலையில் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகியோர் மீண்டும் வந்ததால் அதைத் தொடர்ந்து நடந்த ஆஸ்திரேலிய டி20 தொடரில் வாய்ப்பு பெறவில்லை. அதன்பின் ஜஸ்பிரித் பும்ரா திடீரென காயத்தால் வெளியேறியதால் தென் ஆப்ரிக்க தொடரில் வாய்ப்பு பெற்ற அவர் பந்து வீச்சிலும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு அசத்தினார்.

- Advertisement -

அதன் காரணமாக பும்ராவுக்கு பதில் உலக கோப்பையில் மாற்று வீரராக விளையாட தீபக் சஹர் தகுதியானவர் என்று வாசிம் ஜாபர், ஹர்பஜன் சிங் போன்ற முன்னாள் வீரர்கள் ஆதரவு கொடுத்தனர். ஆனால் தற்போது மீண்டும் காயமடைந்துள்ள அவர் உலகக் கோப்பையிலும் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. அதனால் உலக கோப்பைக்கான இந்திய அணியில் பும்ராவுக்கு பதில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி விளையாடுவது 90% உறுதியாகியுள்ளது.

வாஷிங்டன் சுந்தர்:
அதை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் தொடரில் மட்டும் தீபக் சஹருக்கு பதில் தமிழகத்தைச் சேர்ந்த சுழல் பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2017இல் அறிமுகமான இவர் காயங்களுக்கு மிகவும் பிரபலமானவர். ஏனெனில் அறிமுகப் போட்டிக்குப் பின் 2வது போட்டியை 4 வருடங்கள் கழித்து கடந்த பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக விளையாடிய அவர் மீண்டு 2022 ஐபிஎல் தொடரில் காயத்தை சந்தித்து வெளியேறினார்.

இதையும் படிங்க: டி20 உ.கோ’யில் இந்தியாவை சம்பவம் செய்வதற்கு தயாராகிட்டாரு – நட்சத்திர பவுலரின் காயம் குறித்து பாக் வாரியம் மகிழ்ச்சி

அதிலிருந்து குணமடைந்து இங்கிலாந்தின் கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று அசத்தலாக செயல்பட்ட அவர் சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் தேர்வு செய்யப்பட்டாலும் மீண்டும் கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறினார். தற்போது அதிலிருந்து குணமடைந்துள்ள அவர் இந்த தொடரில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இனியாவது காயமடையாமல் விளையாட வேண்டும் என்பதே தமிழக ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. 2017இல் அறிமுகமான இவர் இதுவரை 4 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement