
இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த கையோடு இந்திய அணியானது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. 2025-27 ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முதல் தொடராக இந்த அமைந்துள்ளதால் இந்த தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது.
சமீபத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டனர். அதன்காரணமாக அவர்களுக்கு பதிலாக எந்தெந்த வீரர்கள் அணியில் இடம் பிடிக்கப்போகிறார்கள்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டதால் அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய தொடரின் போது வாஷிங்டன் சுந்தர் பிளேயிங் லெவனில் இணைந்து விளையாடி இருந்தார்.
இதன் காரணமாக இங்கிலாந்து தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவலின் படி இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்படுவது கடினம் என்றும் அப்படி தேர்வு செய்யப்பட்டாலும் பிளேயிங் லெவனில் அவருக்கு இடம் கிடைக்காது என்று கூறப்படுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமான வாஷிங்டன் சுந்தர் இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 468 ரன்களையும், பந்துவீச்சில் 25 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை நல்ல ஒரு ஆல்ரவும்ண்டராக திகழும் அவருக்கு இங்கிலாந்து தொடரில் முக்கியத்துவம் கிடைக்காது என்று கூறப்படுகிறது. ஏனெனில் இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்கள் பொதுவாகவே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானவை.
எனவே இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பெரும்பாலும் நான்கு வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் தான் செல்லும். அப்படி செல்லும் பட்சத்தில் ரவீந்திர ஜடேஜா தான் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக அணிக்குள் தேர்வு செய்யப்படுவார். மற்றபடி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக நிதீஷ் ரெட்டி மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் இருப்பதினால் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : கோலி, ரோஹித் போனதே நல்லது.. அவங்க ஃபிட்டாக இருந்தா இங்கிலாந்தில் இந்தியா ஜெய்க்கும்.. தெ.ஆ வீரர்
ஏற்கனவே ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அறிமுகமான நிதீஷ் குமார் ரெட்டி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் அவருக்கே இந்த இங்கிலாந்து தொடரிலும் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தெரிகிறது.