இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்த சில நாட்களில் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பான விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. ஏனெனில் கடந்தக் காலங்களில் சிறப்பாக விளையாடிய அவர்கள் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளனர்.
இருப்பினும் சமீப காலங்களில் சிறப்பாக பேட்டிங் செய்யத் தவறிய அவர்களை கழற்றி விட்டுள்ள பிசிசிஐ அடுத்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் புதிய அணியை களமிறக்க தயாராகி வருகிறது. ஆனால் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர் முதல் விராட் கோலி, ரோஹித் சர்மா வரை இந்தியாவின் ஜாம்பவான்கள் யாரும் இங்கிலாந்தில் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவித்ததில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இம்முறை விராட், ரோகித் இல்லாமல் இங்கிலாந்தில் விளையாடப்போகும் இளம் இந்திய அணி வெற்றி பெறுவது அசாத்தியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
கவலை வேண்டாம்:
இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதால் இங்கிலாந்து தொடரை பற்றி இந்தியா கவலைப்பட வேண்டியதில்லை என்று முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டார்ல் குல்லினன் தெரிவித்துள்ளார். ஏனெனில் ஜெய்ஸ்வால், நித்திஷ் ரெட்டி போன்ற தரமான இளம் வீரர்கள் இந்தியாவிடம் உள்ளதாக அவர் கூறியுள்ளார். அதே சமயம் பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோர் ஃபிட்டாக இருந்து அனைத்துப் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அந்த பவுலர்கள் 5 போட்டிகளிலும் விளையாடினால் இங்கிலாந்து மண்ணில் இந்தியா வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவும் குல்லினன் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவின் அனைத்து பவுலர்களும் ஃபிட்டாக தொடர் முழுவதும் விளையாடினால் இங்கிலாந்து மண்ணில் வெற்றி பெற நிதர்சனமான வாய்ப்புள்ளது”
திறமை இருக்கு:
“அவர்கள் எப்போதும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புடன் செல்வார்கள். அவர்களிடம் எதிரணியை ஆல் அவுட் செய்யும் திறன் இருக்கிறது. இந்திய பேட்டிங் வரிசையில் போதுமான திறமையும் ஆழமும் இருக்கிறது. இது இளம் இந்திய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை புரிந்து கொண்டு விளையாடுவதற்கான சிறந்த வாய்ப்பாகும்”
இதையும் படிங்க: ரோஹித் போனது இந்தியாவுக்கு இழப்பல்ல லாபமே.. இப்படி சொல்ல இதான் காரணம்.. தெ.ஆ வீரர் வெளிப்படை
“அல்லது டெஸ்ட் கிரிக்கெட்டில் வருங்கால நட்சத்திரங்கள் யாராக இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாகும். எனவே இந்த இங்கிலாந்து தொடர் இந்தியாவுக்கு சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும். அது அவர்களுடையப் போட்டி சூழ்நிலைகளை உயர்த்திக் காட்டும்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து இங்கிலாந்து தொடருக்கு முன் அங்கு இந்தியா சில பயிற்சிப் போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது



