இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. என்ன தான் சமீபத்திய போட்டிகளில் தடுமாறினாலும் அவர்களிமும் மிகப்பெரிய அனுபவமிருக்கிறது. எனவே அடுத்ததாக நடைபெறும் இங்கிலாந்து மண்ணில் அவர்கள் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதிலும் ரோஹித் சர்மா கடைசியாக நடைபெற்ற 2 ஐசிசி கோப்பைகளையும் கேப்டனாக இந்தியாவுக்கு வென்று சாதனைப் படைத்தார். அப்படிப்பட்ட அவர் ஓய்வு பெற்றுள்ளதால் இந்தியாவின் கேப்டன்ஷிப் பதவியில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக சில முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றது இந்தியாவுக்கு இழப்பல்ல என்று முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டார்ல் குல்லினன் கூறியுள்ளார்.
ரோஹித் இழப்பல்ல:
ஏனெனில் வெளிநாட்டு மண்ணில் ரோஹித் சர்மா நீண்ட காலமாகவே தடுமாற்றமாக விளையாடியதாக அவர் கூறியுள்ளார். அதனால் எப்போதோ ஓய்வு பெற்றிருக்க வேண்டிய ரோஹித் இப்போது ஓய்வு பெற்றது இந்திய அணிக்கு லாபம் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி குல்லினன் பேசியது பின்வருமாறு.
“ரோஹித் சர்மாவின் ஓய்வு நீண்ட காலமாக எடுக்கப்பட வேண்டிய ஒரு முடிவாக இருந்தது. குறிப்பாக இந்தியாவுக்கு வெளியே ரோகித் சர்மா எப்போதோ ஓய்வு பெற்றிருக்க வேண்டும். இந்த விஷயத்தில் அனைவரும் கொஞ்சம் நேர்மையுடன் இருக்க வேண்டும். அவர் தன்னுடைய கேரியர் முழுவதும் சொந்த மண்ணில் விளையாடியது போல் வெளிநாட்டில் விளையாடவில்லை”
இந்தியாவுக்கு லாபமே:
“எடுத்துக்காட்டாக சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் பேட்ஸ்மேனாக அவருடைய ஆட்டத்தைப் பார்த்தோம். கேப்டனாக அணியை முன்னின்று வழிநடத்த தயங்குவதையும் நாம் பார்த்தோம். எனவே அவர் ஓய்வு பெற்றது இந்தியாவுக்கு ஒரு இழப்பாக நான் பார்க்கவில்லை” என்று கூறினார். முன்னதாக ரோகித் சர்மா சொந்த மண்ணில் மட்டுமே அடித்து நொறுக்கக்கூடியவர் என்று குல்லினன் சில மாதங்களுக்கு முன்பாக விமர்சனம் செய்திருந்தார்.
இதையும் படிங்க: முரட்டு தனமான மிரட்டல் ஹிட்டரை மாற்றுவீரராக ஒப்பந்தம் செய்துள்ள மும்பை இந்தியன்ஸ் – விவரம் இதோ
அவர் கூறுவது போல கடந்த ஆஸ்திரேலிய தொடரில் மிகவும் மோசமாக பேட்டிங் செய்த ரோஹித் சர்மா ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. அதனால் கடைசிப் போட்டியில் தன்னைத்தானே நீக்கிக் கொண்ட முதல் இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையையும் அவர் படைத்தார். இதைத் தொடர்ந்து ரோஹித் சர்மா இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக மட்டும் விளையாடப் போவது குறிப்பிடத்தக்கது.



