ஐபிஎல் தொடரின் 25 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராத் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக கேப்டன் விராட்கோலி 52 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 90 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதன்பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே அடித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 42 ரன்களும், அறிமுக வீரர் ஜெகதீசன் 33 ரன்களையும் அடித்தனர்.
இதனால் பெங்களூர் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி பெற்ற இந்த தோல்வியின் மூலம் பிளே ஆப் செல்லும் வாய்ப்பு மங்கி உள்ளது. இந்த போட்டியில் பெங்களூர் அணி சார்பாக கிரிஸ் மோரிஸ் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வாஷிங்டன் சுந்தர் மூன்று ஓவர்கள் வீசி 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வானார்.
இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் கூறுகையில் : பவர் பிளே ஓவர்களில் பந்து வீசுவது பெருமையாக உள்ளது. அதிலும் குறிப்பாக வாட்சன் மற்றும் டூபிளெஸ்ஸிஸ் ஆகிய இரண்டு சிறந்த பேட்ஸ்மேன் உங்களுக்கு எதிராக நான் பந்து வீசுவது மிகவும் மகிழ்ச்சி. சிஎஸ்கே அணிக்கு எதிராக நான் பந்து வீசுவது எனக்கு கிடைத்த அற்புதமான வாய்ப்பாகக் கருதுகிறேன்.
என்னால் இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீச முடியும் என்று நினைத்தேன். அதன்படி சிறப்பாகவும் எனது திட்டத்தை வெளிப்படுத்தி பந்து வீசினேன். ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் எதிராகவும் ஒவ்வொரு திட்டத்துடன் பந்துவீசி வருகிறேன். என்னால் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பந்து வீச முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது. குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் வீசுவது எனக்கு பெரிதளவில் உதவுகிறது.
மோரிஸ் முதல் போட்டியிலேயே அருமையாக செயல்பட்டார். இசுரு உடானா சிறப்பாக பந்து வீசினார். போட்டியின் முக்கிய விக்கெட்டான தோனியின் விக்கெட்டை சாஹல் கைப்பற்றினார் என பவுலர்கள் அனைவரும் நாங்கள் இன்றைய போட்டியில் சிறப்பாகவே செயல்பட்டோம். வாட்சன் மற்றும் ஃபேப் டு பிளேசிஸ் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்த கோலியுடன் சிறிது ஆலோசனை நடத்தினோம். அதன்படி அவர்கள் இருவரும் விக்கெட்டையும் விழுத்தியது எனக்கு மகிழ்ச்சி என்று சுந்தர் கூறியது குறிப்பிடத்தக்கது.