
தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் கடந்த 2017-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 54 டி20 போட்டிகள், 23 ஒருநாள் போட்டிகள் மற்றும் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் கடந்து 2017-ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் அவர் இதுவரை 66 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அண்மையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இக்கட்டான சூழலில் இருந்த வேளையில் இரண்டாவது இன்னிங்ஸ்சின் போது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 206 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 101 ரன்கள் குவித்து சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தியிருந்தார்.
அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாகவே இந்திய அணி அந்த போட்டியை டிரா செய்தது. இவ்வேளையில் தனது மகன் தொடர்ந்து சிறப்பாக விளையாடினாலும் அவர் இந்திய அணியின் நிர்வாகத்தால் ஓரம் கட்டப்பட்டு வருவதாக அவரது தந்தை வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது :
வாஷிங்டன் சுந்தர் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அவரது திறமையை பலரும் கண்டுகொள்வதில்லை. மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பது போல் எனது மகனுக்கு தொடர்ச்சியான வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை. இது என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : 2021-ஆம் ஆண்டு சென்னை மற்றும் அகமதாபாத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடியும் எனது மகனுக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. தேசிய அணியில் மட்டும் இல்லாமல் ஐபிஎல் தொடரிலும் இப்படித்தான் நடக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 15 போட்டிகளில் அவருக்கு வெறும் 6 போட்டியில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படிங்க : என்னோட ஆசை இதுதான்.. அணியில் இருந்து வெளியேறும் முன் வீரர்களிடையே பேசிய ரிஷப் பண்ட் – விவரம் இதோ
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை எப்படி ஆதரிக்கிறது என்று பாருங்கள். ஆனால் அப்படி ஒரு ஆதரவு எனது மகனுக்கு கிடைப்பதில்லை. சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் மட்டுமின்றி உள்ளூர் போட்டிகளிலும் இதே நிலைமைதான் எனது மகனுக்கு தொடர்கிறது என வாஷிங்டன் சுந்தரின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.