50 ரன்ஸ்.. இந்தியாவுக்காக நங்கூரத்தின் அடையாளமாக நின்ற சுந்தர்.. 16 வருடம் கழித்து அபார சாதனை

Washington Sundar
- Advertisement -

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ம் தேதி துவங்கியது. அதில் முதலாவதாக விளையாடிய ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140, மார்னஸ் லபுஸ்ஷேன் 72 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி 82 ரன்கள் குவித்து அவுட்டானார். ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா 3, விராட் கோலி 36 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் கேஎல் ராகுலும் 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக வந்த ரிஷப் பண்ட் 28, ஜடேஜா 17 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார்கள்.

- Advertisement -

நங்கூரமாக சுந்தர்:

அதனால் 221-7 என தடுமாறிய இந்திய அணி மீண்டும் ஃபாலோ ஆனை தவிர்க்கவே போராடியது. ஆனால் அப்போது நித்திஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஜோடி சேர்ந்து நங்கூரமாக விளையாடினார்கள். அதில் நங்கூரத்திற்கு அடையாளமாக நின்ற வாஷிங்டன் சுந்தர் மிகவும் மெதுவாகவும் நேர்த்தியாகவும் விளையாடினார்.

அவருடன் சேர்ந்து அசத்திய நித்திஷ் ரெட்டி அரை சதமடித்து அசத்தினர். நேரம் செல்ல செல்ல சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் வாஷிங்டன் சுந்தர் வெறும் ஒரே ஒரு பவுண்டரி மட்டும் அடித்து 162 பந்துகளில் 50 ரன்கள் குவித்து அவுட்டானார். மேலும் 8வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் இந்தியாவை ஃபாலோ ஆன் அவமானத்திலிருந்து காப்பாற்றி ரசிகர்களின் பாராட்டுக்கு மத்தியில் வெளியேறினார்.

- Advertisement -

அபார சாதனை:

அந்த வகையில் இந்தப் போட்டியில் 9வது இடத்தில் களமிறங்கி வாஷிங்டன் சுந்தர் அரை சதத்தை பதிவு செய்துள்ளார். இதன் வாயிலாக சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் 16 வருடங்கள் கழித்து 9வது இடத்தில் அரை சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. கிரண் மோர்: மெல்போர்ன், 1991
2. ஹர்பஜன் சிங்: சிட்னி, 2008
3. ஹர்பஜன் சிங்: அடிலெய்ட், 2008
4. வாசிங்டன் சுந்தர்: மெல்போர்ன், 2024*

இதையும் படிங்க: 105 ரன்ஸ்.. 21 வயதில் இந்தியாவை தூக்கிய நிதிஷ் ரெட்டி.. ஆஸி மெல்போர்ன் மண்ணில் உலக சாதனை

அத்துடன் நித்திஷ் ரெட்டியுடன் சேர்ந்து ஆஸ்திரேலிய மண்ணில் 8வது விக்கெட்டுக்கு இரண்டாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் (127) அமைத்த ஜோடியாகவும் சுந்தர் சாதனை படைத்தார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அசத்திய நித்திஷ் ரெட்டி சதத்தை அடித்து 105* ரன்கள் குவித்தார். அப்போது நிறைவுக்கு வந்த 3வது நாள் முடிவில் 358-9 ரன்கள் எடுத்துள்ள இந்தியா இன்னும் 116 ரன்கள் பின்தங்கியுள்ளது.

Advertisement