இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் டிசம்பர் 26 முதல் நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140, லபுஸ்ஷேன் 72 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி மூன்றாவது நாள் முடிவில் 358-9 ரன்களை குவித்து போராடி வருகிறது. இந்திய அணிக்கு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 82 ரன்கள் குவித்து அபாரமாக போராடி ரன் அவுட்டானார். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா 3, கேஎல் ராகுல் 24, விராட் கோலி 36 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.
நிதிஷ் ரெட்டி மிரட்டல்:
அதே போல மிடில் ஆர்டரில் ரவீந்திர ஜடேஜா 17, ரிஷப் பண்ட் 28 ரன்களில் அவுட்டானதால் இந்தியா தடுமாறியது. ஆனால் அப்போது ஜோடி சேர்ந்த நித்திஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நங்கூரமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதில் மிகவும் மெதுவாக நேர்த்தியாக விளையாடிய வாசிங்டன் சுந்தர் அரை சதமடித்து 50 ரன்கள் குவித்து இந்தியாவை ஃபாலோ ஆன் அவமானத்திலிருந்து காப்பாற்றி அவுட்டனார்.
மறுபுறம் அவருடன் 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய நித்திஷ் ரெட்டி சதமடித்து இந்தியாவை காப்பாற்றி தனது அப்பாவை பெருமைப்பட வைத்து 105* ரன்களுடன் களத்தில் உள்ளார். அந்த வகையில் இப்போட்டியில் நித்திஷ் ரெட்டி 8வது இடத்தில் களமிறங்கி சதத்தை பதிவு செய்துள்ளார். இதன் வாயிலாக சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் 8வது இடத்தில் களமிறங்கி சதத்தை அடித்த முதல் முதல் வீரர் என்ற வரலாறு காணாத உலக சாதனையை நிதிஷ் ரெட்டி நிகழ்த்தியுள்ளார்.
அபார சாதனை:
அதே போல ஆஸ்திரேலிய மண்ணில் 8வது இடத்தில் அதிகபட்ச ஸ்கோர் (105*) பதிவு செய்த இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2008ஆம் ஆண்டு அடிலெய்ட் மைதானத்தில் அனில் கும்ப்ளே 87 ரன்கள் அடித்ததே முந்தைய அதிகபட்ச ஸ்கோர். அத்துடன் மெல்போர்ன் மைதானத்தில் 8வது இடத்தில் சதமடித்த முதல் வீரர் என்ற உலக சாதனை நிதிஷ் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: கொஞ்சம் பதட்டமாயிட்டேன்.. இந்த நாளை என் வாழ்நாளில் மறக்க முடியாது – நிதீஷ் ரெட்டியின் தந்தை நெகிழ்ச்சி
இதற்கு முன் இங்கே 2012, 1947ஆம் ஆண்டு மிட்சேல் ஜான்சன், டொனால்ட் டாலோன் தலா 92 ரன்கள் அடித்ததே முந்தைய அதிகபட்ச ஸ்கோர். மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் 3வது இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையும் நித்திஷ் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர்: 18 வருடம் 256 நாட்கள், சிட்னி, 1992
2. ரிஷப் பண்ட்: 21 வருடம் 92 நாட்கள், சிட்னி, 2019
3. நிதிஷ் ரெட்டி: 21 வருடம் 216 நாட்கள்
4. டாட்டு பட்கர்: 22 வருடம் 46 நாட்கள், அடிலெய்ட், 1948



