IND vs NZ : ஆல் ரவுண்டராக போராடிய வாஷிங்டன் சுந்தர் – வேறு எந்த இந்திய வீரரும் படைக்காத தனித்துவமான வரலாற்று சாதனை

Washington Sundar.jpeg
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்று ஐசிசி தரவரிசையில் புதிய உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறிய இந்தியா அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் இல்லாத இத்தொடரின் முதல் போட்டி ஜனவரி 27ஆம் தேதியன்று ராஞ்சியில் நடைபெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 176/6 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் டேவோன் கான்வே 52 (35), பின் ஆலன் 35 (23) ரன்களை எடுத்த நிலையில் கடைசி நேரத்தில் டார்ல் மிட்சேல் 59* (30) ரன்கள் விளாசி பினிஷிங் கொடுத்தார்.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 177 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சுப்மன் கில் 7, இஷான் கிசான் 4, ராகுல் திரிபாதி 0 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் 15/3 என சரிந்த இந்தியாவை 4வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஓரளவு காப்பாற்றிய சூரியகுமார் யாதவ் 47 (34) ரன்களும் கேப்டன் பாண்டியா 21 (20) ரன்களும் எடுத்து முக்கிய நேரத்தில் அவுட்டானார்கள்.

- Advertisement -

போராடிய வாஷிங்டன்:
போதாக்குறைக்கு தீபக் ஹூடா 10 ரன்னில் பொறுப்பின்றி அவுட்டானதால் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவுக்கு கடைசி நேரத்தில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆனதாகட்டும் பார்த்துக் கொள்வோம் என்ற வகையில் 5 பவுண்டரி 3 சிக்சர்களை விளாசி 50 (28) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் போராடி அவுட்டானார். அதனால் 20 ஓவரில் 155/9 ரன்களுக்கு இந்தியாவை சுருட்டி 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து ஒருநாள் தொடர் தோல்விக்கு பதிலடி கொடுத்து 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக இப்போட்டியில் ஆரம்பம் முதலே ஹர்திக் பாண்டியா, உம்ரான் மாலிக், சிவம் மாவி போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கிய நிலையில் அர்ஷிதீப் சிங் கடைசி ஓவரில் மட்டும் நோ-பால் உட்பட 27 ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் மறுபுறம் மொத்தமாக 10 ஓவரில் 56 ரன்களை மட்டும் கொடுத்த இந்திய ஸ்பின்னர்களின் போராட்டம் வீணானது. ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் சேர்ந்து எஞ்சிய 10 ஓவரில் 120 ரன்களை கொடுத்தனர்.

- Advertisement -

குறிப்பாக 4 ஓவரில் 22 ரன்கள் மட்டும் கொடுத்த வாஷிங்டன் சுந்தர் 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதிலும் குறிப்பாக 5வது ஓவரில் மிரட்டலை கொடுத்த பின் ஆலனை 35 (23) ரன்களில் அவுட்டாக்கிய அவர் அடுத்து வந்த மார்க் சாப்மேன் கொடுத்த கேட்ச்சை சூப்பர் மேன் போல தாவி பிடித்து டக் அவுட்டாக்கினார். அத்துடன் பேட்டிங்கில் கடைசி நேரத்தில் வெறித்தனமாக போராடிய அவர் டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

இதற்கு முன் தனது கேரியரில் 12 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வெறும் 47 ரன்கள் மட்டும் எடுத்த அவர் இந்த ஒரே போட்டியில் 50 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு முழு மூச்சுடன் போராடினார். அதை விட இப்போட்டியில் மொத்தமாக 2 விக்கெட், 1 கேட்ச், 50 ரன்கள் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் குறைந்தது 50 ரன்கள், 1 விக்கெட், 1 கேட்ச் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: IND vs NZ : முதல் டி20 போட்டியில் நாங்கள் இந்திய அணியை வீழ்த்த இதுவே காரணம் – மிட்சல் சான்ட்னர் மகிழ்ச்சி

இதற்கு முன் யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வேறு எந்த இந்திய வீரரும் இப்படி ஒரு சாதனையை படைத்ததே கிடையாது. இதுவரை ஜடேஜா கேரியரில் அரை சதம் அடித்ததில்லை. அதே போல் பேட்டிங் பந்து வீச்சில் அசத்தினாலும் யுவராஜ் சிங், பாண்டியா ஆகியோர் இதற்கு முன் கேட்ச் பிடித்ததில்லை. அந்த வகையில் வாஷிங்டன் சுந்தரை நினைத்து தமிழக ரசிகர்கள் மிகவும் பெருமை அடைகிறார்கள்.

Advertisement