நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களது சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. பெங்களூருவில் துவங்கிய அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ள இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறவும் இத்தொடரை வெல்லவும் கடைசி 2 போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக கடைசி 2 போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அந்த அணியில் பிரத்தியேகமாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மட்டும் எக்ஸ்ட்ராவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2021 காபா டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அவர் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வெற்றி பெற முக்கிய பங்காற்றினார்.
இந்திய அணியில் சுந்தர்:
அதைத் தொடர்ந்து சில காயங்களை சந்தித்த அவர் இந்தியாவுக்காக மீண்டும் விளையாடிய வாய்ப்புகளில் நன்றாகவே செயல்பட்டார். குறிப்பாக சமீபத்திய ஜிம்பாப்வே, இலங்கை டி20 தொடரில் வாஷிங்டன் சுந்தர் தொடர்நாயகன் விருதுகளை வென்று இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். அந்த நிலையில் தற்போது இந்தியாவில் 2024 ரஞ்சிக் கோப்பை நடைபெற்று வருகிறது.
அதில் டெல்லிக்கு எதிரான போட்டியில் 3வது இடத்தில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் சதமடித்து 152 ரன்கள் குவித்தார். அதே போல பந்து வீச்சில் இதுவரை அவர் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். அந்த வகையில் கிட்டத்தட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் போலவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் நல்ல ஆல் ரவுண்டராக செயல்பட்டு வருகிறார்.
அஸ்வின் வழியில்:
அதன் காரணமாகவே தற்போது இந்திய அணியில் அவருக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சொல்லப்போனால் 37 வயதாகும் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்னும் சில வருடங்களில் ஓய்வு பெற உள்ளார். மறுபுறம் அக்சர் படேல், ஜடேஜா ஆகியோர் இடது கை ஸ்பின்னர்களாக இருக்கிறார்கள். அஸ்வின் போல வலது கை ஆஃப் ஸ்பின்னர் இந்திய அணியில் தற்சமயத்தில் இல்லை.
இதையும் படிங்க: 2வது டெஸ்டில் கேஎல் ராகுல் நீக்கப்படுவாரா? சர்பராஸ் தொடர்ந்து வாய்ப்பு பெறுவாரா? கேப்டன் ரோஹித் பதில்
அதனாலேயே ரவிச்சந்திரன் அஸ்வின் இடத்தில் வருங்காலங்களில் விளையாடுவதற்காக வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில் அஸ்வின் போல ஆல் ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் உள்ளூர் கிரிக்கெட்டில் அசித்தி வருகிறார். அதனால் வருங்காலத்தில் அஸ்வின் இடத்தை நிரப்பி தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் அவர் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே தமிழக ரசிகர்களின் விருப்பமாகும்.



