ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. கடந்த ஓராண்டாகவே ரோஹித்தின் தலைமையில் எந்த ஒரு டி20 தொடரையும் இழக்காத இந்திய அணியானது இம்முறை நிச்சயம் டி20 உலக கோப்பையை கைப்பற்றும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த இந்திய அணியானது இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

இனிவரும் போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்த கேள்வி தற்போதே ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனெனில் ரோகித் சர்மாவிற்கு தற்போது 35 வயது ஆகியுள்ளதால் விரைவில் அவர் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெறவும் வாய்ப்பு உள்ளதால் அடுத்த கேப்டன் குறித்த பேச்சுக்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாகும் தகுதி ஹார்டிக் பாண்டியாவிற்கு இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : ஹார்டிக் பாண்டியாவை நன்றாக கவனித்தோம் என்றால் ஐபிஎல் அணியை அவர் எப்படி வழிநடத்தி கோப்பையை வென்று தந்திருக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். ஒரு வீரராக நம் மீது நிறைய அழுத்தம் இருக்கும் அதே ஒரு கேப்டனாக ஒரு வீரர் மீது ஏகப்பட்ட அழுத்தம் இருக்கும்.

ஆனால் அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அணியை எவ்வாறு கையாள வேண்டும் என்பதே கேப்டனின் மிகப்பெரிய சவாலாக இருக்கும். அந்த வகையில் குஜராத் அணியை அற்புதமாக வழிநடத்திய அவர் சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்தார். அதன் மூலம் அவருக்கு கேப்டன் பதவியை எவ்வாறு கையாள்வது என்பது தெரிந்திருக்கிறது. ஏனெனில் சமீப காலமாகவே பினிஷர் ரோலில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருந்தாலும் அவ்வப்போது ரோகித்துக்கும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
அந்த வகையில் என்னை பொறுத்தவரை கேப்டன்சிக்கு தகுதி உடைய நிறைய பண்புகள் அவரிடம் ஒத்துப் போவதால் அடுத்த இந்திய அணியின் கேப்டனாக அவர் மாறினாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். மேலும் சமீப காலத்தில் அவருடைய ஆட்டத்தை கவனித்தோம் என்றால் நிச்சயம் அணியின் வெற்றிக்கு வீரர்களை ஒன்று சேர்த்து அழைத்துச் செல்லும் தன்மையும் ஹார்டிக் பாண்டியாவிடம் உள்ளது. எனவே நிச்சயம் இந்திய அணியின் அடுத்த கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க : INDvsPAK : விதிமுறையை மீறி நடந்துகொண்ட பாகிஸ்தான் வீரர் – நடவடிக்கை எடுக்குமா ஐ.சி.சி?
அது மட்டும் இன்றி தொடர்ந்து பேசிய அவர் : ஹார்டிக் பாண்டியாவின் கரியரின் ஆரம்பத்தில் சுமாரான பங்களிப்பையே அவர் வழங்கி வந்தாலும் தற்போது ஒரு ஆல் ரவுண்டராக இந்திய அணிக்கு எந்த அளவிற்கு தம் பங்களிக்க வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் அணி சரிவில் இருக்கும் போதெல்லாம் தனது அனைத்து வகையான திறன்களாலும் நல்ல பலத்தை அளித்து வருகிறார். எனவே நிச்சயம் அவர் கேப்டனாகவும் சிறப்பாக செயல்படுவார் என வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



