சுமாரா போட்டாலும் அடிக்க மாட்டாங்க.. ஏன்னா ஸ்டைன் மாதிரி பும்ரா இதை செஞ்சுருக்காரு.. வகார் யூனிஸ்

Waqar Younis 3
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த வெற்றிகளுக்கு ஜஸ்ப்ரித் பும்ரா முக்கிய காரணமாக திகழ்கிறார் என்றே சொல்லலாம். ஏனெனில் அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 3 ஓவரில் ஒரு மெய்டன் உட்பட வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை விட பாகிஸ்தானுக்கு எதிராக வெறும் 119 ரன்கள் அடித்த இந்தியா கண்டிப்பாக தோற்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் பந்து வீச்சில் ஆரம்பம் முதலே நெருப்பாக செயல்பட்ட பும்ரா முக்கிய நேரத்தில் நங்கூரமாக விளையாடிய முகமது ரிஸ்வானை 31 ரன்களில் அவுட்டாக்கி திருப்பு முனையை உண்டாக்கினார். அதே வேகத்தில் 4 ஓவரில் 14 ரன்கள் மட்டும் கொடுத்த அவர் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

டேல் ஸ்டைன் மாதிரி:
அவருடைய துல்லியமான பந்து வீச்சால் 20 ஓவரில் பாகிஸ்தானை 113 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த வகையில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி வருகிறார். இந்நிலையில் டேல் ஸ்டைன் போல மிகவும் துல்லியமாக பந்து வீசுவார் என்ற எண்ணத்தை பேட்ஸ்மேன்களுக்கு மத்தியில் பும்ரா உருவாக்கியுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் வீரர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

எனவே சுமாராக பந்து வீசினாலும் அவரை பேட்ஸ்மேன்கள் அடிக்க மாட்டார்கள் என்று தெரிவிக்கும் யூனிஸ் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ரா க்ளாஸ் வீரர். அவர் பந்து வீசும் விதத்தை நீங்கள் பாராட்ட வேண்டும். சூழ்நிலைகளை படித்து சாதுரியமாக செயல்படும் அவருக்கு என்ன செய்கிறோம் என்பது தெரியும். பாகிஸ்தானுக்கு எதிராக மட்டுமல்ல எந்த அணிக்கு எதிராகவும் அவர் இதை செய்வதை நான் பலமுறை பார்த்துள்ளேன்”

- Advertisement -

“இது போன்ற பிட்ச்களில் என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். நேற்று அவர் டாப் கிளாசில் செயல்பட்டார். புதிய பந்தை பெறாத அவருக்கு 3வது ஓவர் கிடைத்தது. அதில் கிட்டத்தட்ட பாபர் விக்கெட்டை எடுத்த அவர் ரிஸ்வான் மற்றும் சில விக்கெட்டுகளை எடுத்தது பாகிஸ்தான் அணியை உடைத்தது. ஒரு கட்டத்தில் அவர் டேல் ஸ்டைன் போல பயத்தை உருவாக்கியுள்ளார்”

இதையும் படிங்க: ஷிவம் துபேவுக்கு பதிலா பிளேயிங் லெவன்ல அவர்தான் ஆடனும். அதுதான் கரெக்ட் – அம்பத்தி ராயுடு கருத்து

“அது பேட்ஸ்மேன்களின் மனதில் விளையாடுகிறது. அதனால் மோசமான பந்தை வீசினால் கூட பேட்ஸ்மேனாக நீங்கள் அவரிடம் விக்கெட்டை இழந்து விடுவோமோ என்று தயங்குவீர்கள். அப்படி நினைக்கும் போது நீங்கள் அடிப்பதற்கான வாய்ப்பையும் தவற விடுவீர்கள். எப்போதும் நான் பாராட்டும் பும்ரா தற்சமத்தில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறந்த பவுலராக திகழ்கிறார்” என்று கூறினார்.

Advertisement