அம்பயரை கைக்குள்ள போட்டுக்கிட்டு கோலி போடும் ஆட்டத்துக்கு முடிவில்லையா – 2 முன்னாள் பாக் வீரர்கள் காட்டம்

Kohli
Advertisement

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 15 வருடங்கள் கழித்து 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. குறிப்பாக நவம்பர் 2ஆம் தேதியன்று வங்கதேசத்துக்கு எதிராக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்தியா முக்கிய நேரங்களில் அசத்தலாக செயல்பட்டு 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் பரபரப்பாக நடைபெற்ற அப்போட்டியில் இந்தியா நிர்ணயித்த 185 ரன்களை துரத்திய வங்கதேசத்துக்கு எரிமலையாக வெடித்த லிட்டன் தாஸ் 60 (27) ரன்களை குவித்து மிரட்டலை கொடுத்தார்.

Virat Kohli IND vs BAN

ஆனால் மழை வந்து புதிய இலக்கு உருவாக்கப்பட்டதும் அவரை கேஎல் ராகுல் ரன் அவுட் செய்ததால் ஏற்பட்ட திருப்பு முனையை பயன்படுத்தி இந்தியா அடுத்து வந்த சாகிப் அல் ஹசன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்து அற்புதமான கம்பேக் கொடுத்து வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு பேட்டிங்கில் 4வது ஓவரில் களமிறங்கி கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகியும் கடைசி வரை அவுட்டாகாமல் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 64* (44) ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

கைக்குள் அம்பயர்கள்:
அப்படி விறுவிறுப்பாக ரன்களை சேர்த்த அவர் ஹசன் முகமத் வீசிய 16வது ஓவரின் கடைசி பந்து பவுன்ஸ் ஆகி வந்ததால் அதை அடித்து விட்டு சிங்கிள் எடுத்துக் கொண்டே நோ-பால் கேட்டார். ஏனெனில் அந்த ஓவரில் ஏற்கனவே ஒரு பவுன்சர் வீசப்பட்டிருந்த காரணத்தால் நடுவரும் இறுதியில் நோ பால் வழங்கினார். ஆனால் அப்போது கோபமடைந்த வங்கதேச கேப்டன் சாகிப் அல் ஹசன் விராட் கோலியை கட்டிப்பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டே அவர் கேட்பதற்காக நீங்கள் நோ பால் வழங்கக் கூடாது என்ற வகையில் அம்பயரை சாடினார். அத்துடன் வங்கதேச ரசிகர்களும் இந்தியா மற்றும் விராட் கோலிக்கு ஆதரவாக நடுவர்கள் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்கள்.

இந்நிலையில் இது போன்ற தருணங்களில் வேண்டுமென்றே நோ பால் கேட்டு அம்பயர்கள் மீது விராட் கோலி அழுத்தம் போடுவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அந்த இடத்தில் நீங்கள் பேட்டிங் மட்டும் செய்து நடுவர்களை சுதந்திரமாக செயல்பட விடுங்கள் என்று விராட் கோலியிடம் சாகிப் கூறினார்.

- Advertisement -

நாங்கள் சொல்வதையே அவரும் சொன்னார். அதாவது நீங்களாகவே ஏதேனும் ஒரு முடிவை எடுத்து நடுவர்கள் மீது நீங்கள் அழுத்தத்தை உருவாக்குகிறீர்கள். அத்துடன் அவர் பெரிய பெயரை (விராட் கோலி) கொண்டவர். அவரால் சில சமயங்களில் நடுவர்களும் அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் பேசிய மற்றொரு முன்னாள் வீரர் சோயப் மாலிக் பேசியது பின்வருமாறு. “அந்த இடத்தில் நீங்கள் சொன்னதால் தான் நடுவர் நோ பால் வழங்கினார் என்ற வகையில் விராட் கோலியிடம் சாகிப் அல் ஹசன் சொன்னதாக எனக்கு தோன்றுகிறது” என்று கூறினார்.

Shaoiab Malik Waqar Younis

முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியின் கடைசி ஓவரில் இடுப்பளவு வந்த பந்தில் சிக்சர் அடித்து விட்டு விராட் கோலி நோ பால் கேட்டதால் பணத்தை வாங்கிக் கொண்டு நடுவர்கள் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக நிறைய பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் வெளிப்படையாக விமர்சித்தனர்.

இதையும் படிங்க : வெறித்தனமான பேட்ஸ்மேன், வெறித்தனமான சாதனைகள் – இந்திய ஸ்டார் வீரரை வியந்து பாராட்டும் ஷேன் வாட்சன்

அந்த வகையில் பெரிய பெயரை உருவாக்கி வைத்திருப்பதால் விராட் கோலி கேட்கும் போதெல்லாம் நடுவர்கள் நோ பால் வழங்குவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் அது போன்ற தருணங்களில் உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களுமே நோ பால் அல்லது ஒய்ட் கேட்பது வழக்கமாகும். அது அவர்களது உரிமையும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement