அடுத்த முறை இந்திய மண்ணில் சம்பவம் பன்றோம் – தோல்வியிலும் அடங்காமல் அக்தர் பேசியது என்ன

Akhtar
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் ஜோஸ் பட்லர் தலைமையில் வென்ற இங்கிலாந்து சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனாக சாதனை படைத்துள்ளது. இந்த தொடரில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய மாபெரும் இறுதி போட்டி நவம்பர் 13ஆம் தேதியன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் இங்கிலாந்தின் திறமையான பந்து வீச்சில் 20 ஓவர்களில் 137/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஷான் மசூத் 38 (28) ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஷாம் கரன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

PAK vs ENG

- Advertisement -

அதை தொடர்ந்து 138 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் 1, பிலிப் சால்ட் 10, கேப்டன் ஜோஸ் பட்லர் 26 என முக்கிய வீரர்கள் பாகிஸ்தானின் தரமான பந்து வீச்சில் பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டானார்கள். ஆனால் மறுபுறம் நங்கூரமாக நின்ற 2019 உலகக்கோப்பை நாயகன் பென் ஸ்டோக்ஸ் 52* (49) ரன்களை விளாசி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். அதனால் 2010க்குப்பின் 2வது கோப்பையை வென்ற இங்கிலாந்து டி20 உலகக்கோப்பையில் வெற்றிகரமான அணி என்ற வெஸ்ட் இண்டீஸ் சாதனையை சமன் செய்தது.

அடங்காத அக்தர்:

மறுபுறம் 1992 மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துவோம் என்று வாயில் மட்டும் பேசிய பாகிஸ்தான் பந்து வீச்சில் உயிரை கொடுத்து போராடிய போதிலும் பேட்டிங்கில் 150 ரன்களை எடுக்க தவறியதால் பரிதாபமாக தோற்றது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு ஃபைனல் வரை போராடி தோற்றதால் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை என்று பாகிஸ்தான் வீரர்களை பாராட்டியுள்ள முன்னாள் வீரர் சோயப் அக்தர் அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறும் 2023 உலக கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

VIrat Kohli IND vs PAK

இந்த உலகக் கோப்பையில் ஆரம்பம் முதலே இந்தியாவை கிண்டலடித்து பேசிய அவர் செமி ஃபைனலில் இங்கிலாந்திடம் படுதோல்வியை சந்தித்த நீங்கள் எங்களுடன் ஃபைனலில் மோதுவதற்கு தகுதியில்லை என்று உச்சகட்டமாக விமர்சித்தார். அந்த வரிசையில் இம்முறை தவறினாலும் அடுத்த முறை பரம எதிரியான இந்தியாவின் மண்ணில் அவர்களுக்கு முன்பாக கோப்பையை வென்று பாகிஸ்தான் கெத்தை காட்ட வேண்டும் என்ற வகையில் தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இப்போட்டியில் தோற்றாலும் பரவாயில்லை நான் பாகிஸ்தானுடன் இருக்கிறேன். ஷாஹீன் அப்ரிடியின் காயமே திருப்புமுனை ஏற்படுத்தியது. இன்றைய நாளில் பாகிஸ்தான் போராடிய விதத்தால் நான் மகிழ்ச்சியடைகிறேன்”

- Advertisement -

“ஏனெனில் இதே இங்கிலாந்துக்கு எதிராக இந்திய பவுலர்களால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை. இன்றைய நாளில் மைதானம் வேகத்துக்கு சாதகமாக இருந்ததை பயன்படுத்தி வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஒரே ஒரு லெக் ஸ்பின்னர் வைத்து இங்கிலாந்தை பாகிஸ்தான் கட்டுப்படுத்த முயன்றது. இருப்பினும் பரவாயில்லை இந்த தோல்வியால் துவளாமல் உங்களது தலையை நிமிர்த்துங்கள். அடுத்த முறை தேர்வு மற்றும் ஃபிட்னஸ் அம்சங்களில் பாகிஸ்தான் கண்டிப்புடன் இருக்க வேண்டும். அதை விட அடுத்த வருடம் உலக கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது”

Shoaib Akhtar

“எனவே நமது அணியில் யார் ஹீரோவாக உருவாக விரும்புகிறீர்களோ அவர்கள் அங்கு சென்று வான்கடே (மும்பை) மைதானத்தில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை பாகிஸ்தானுக்கு கொண்டு வாருங்கள். அது தான் உங்களுக்கு நான் விடுக்கும் சவாலாகும். இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை நமதாக இருக்க வேண்டும். அதற்காக கடினமாக உழைத்து அந்த கோப்பையை நமதாக்குங்கள்” என்று கூறினார். அதாவது ஃபைனலில் பாகிஸ்தான் பவுலர்களாவது 5 விக்கெட்டுகளை எடுத்தார்கள் அதுவே இந்தியாவாக இருந்தால் ஒரு விக்கெட் கூட எடுத்திருக்காது என்று மீண்டும் அடங்காமல் சோயப் அக்தர் கிண்டலடித்துப் பேசியுள்ளார்.

அத்துடன் அடுத்த வருடம் இந்தியர்களின் முகத்தில் கரியை பூசும் வகைகையில் அவர்களது சொந்த மண்ணிலேயே கோப்பையை வெல்லும் அளவுக்கு தயாராகுமாறும் பாகிஸ்தான் வீரர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக எங்களது நாட்டுக்கு 2023 ஆசிய கோப்பையில் பங்கேற்க வரவில்லை என்றால் உங்களது நாட்டில் நடைபெறும் உலக கோப்பைக்கு வர மாட்டோம் என்று இதே பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement