இதுவும் நல்லதுக்கு தான், 26 வயதிலேயே ஓய்வு முடிவை அறிவித்த வணிந்து ஹசரங்கா, இலங்கை ரசிகர்கள் ஏமாற்றம் – காரணம் என்ன?

Hasaranga
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 விதமான போட்டிகள் நடைபெறுவதுடன் ஐபிஎல் போன்ற பிரீமியர் லீக் டி20 தொடர்கள் பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டை மிஞ்சும் அளவுக்கு உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தற்போது திரும்பும் இடமெல்லாம் டி20 தொடர்கள், டி10 தொடர்கள், 100 பந்துகளை கொண்ட தொடர்கள் என விதவிதமான போட்டிகள் வருடம் 365 நாட்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக கிரிக்கெட்டின் தரம் உயர்ந்தாலும் அதில் விளையாடும் வீரர்களுக்கு அதிகப்படியான பணிச்சுமை ஏற்பட்டு ஃபார்மை இழக்கும் சூழல் உருவாகிறது.

அதை நிர்வகிப்பதற்காக இப்போதெல்லாம் நிறைய வீரர்கள் குறைந்த வயதிலேயே ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று வருகிறார்கள். குறிப்பாக அது போன்ற நிலையில் தாய்நாட்டுக்காக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடுவதா அல்லது சொந்த வாழ்க்கைக்காக டி20 போட்டிகளில் விளையாடுவதா என்ற சூழ்நிலையை சந்திக்கும் முக்கிய வீரர்கள் கடைசியில் பணத்திற்கே முக்கியத்துவத்தை கொடுக்கின்றனர். அதில் நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட், இங்கிலாந்தின் ஜேசன் ராய் ஆகியோர் தேசிய சம்பள ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய நிலையில் மொய்ன் அலி போன்ற சிலர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகின்றனர்

- Advertisement -

நல்லதுக்கு தான்:
அந்த வரிசையில் இலங்கையைச் சேர்ந்த நட்சத்திர சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர் வணிந்து ஹஸரங்கா கிரிக்கெட்டின் உயிர்நாடியாகவும் ஒரு வீரரின் உண்மையான தரத்தை சோதிக்கும் அங்கமாகவும் கருதப்படும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக 26 வயதிலேயே அறிவித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு குறுகிய காலத்திலேயே நிலையான இடம் பிடித்து இலங்கைக்கு நிறைய வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்து வருகிறார்.

அதன் காரணமாக ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட அவர் அதிலும் சிறப்பாக செயல்பட்டு தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் டி20 ஸ்பின்னராக இருக்கும் ஆப்கானிஸ்தானின் ரசித் கானுக்கே சவால் விடும் வகையில் அசத்தி வருகிறார். அதனால் உலகம் முழுவதிலும் நடைபெறும் அனைத்து டி20 தொடர்களிலும் அவருக்கு நல்ல மவுசும் இருந்து வருகிறது. அதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினால் நாட்டுக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முழு கவனத்தை செலுத்த முடியாது என்று கருதும் ஹசரங்கா இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

குறிப்பாக தமது வெள்ளைப்பந்து கேரியரை நீட்டிப்பதற்காக ஹஸரங்கா எடுத்துள்ள முடிவை இலங்கை வாரியமும் ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது பற்றி இலங்கை வாரியம் கூறியுள்ளது பின்வருமாறு. “இலங்கை ஆண்கள் அணியின் ஆல் ரவுண்டர் வணிந்து ஹஸரங்கா இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் ஸ்பெசலிஸ்ட் வீரராக தம்முடைய கேரியரை நீட்டிப்பதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்”

“நாங்களும் அதை ஏற்றுக்கொண்டு எங்களுடைய வருங்கால வெள்ளைப்பந்து போட்டிகளில் ஹஸரங்கா முக்கிய பங்காற்றுவார் என்று நம்புகிறோம்” எனக் கூறியுள்ளது. அந்த வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் இதுவரை 4 போட்டிகளில் மட்டுமே விளையாடி 4 விக்கெட்டுகளையும் 196 ரன்களையும் எடுத்துள்ளார். அப்படி மிகவும் குறைவான போட்டிகளில் விளையாடி குறைவான வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ஓய்வு பெறுவது இலங்கை ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க:2023 ஆசிய கோப்பை, உ.கோ தொடரில் ரிஷப் பண்ட் கண்டிப்பா விளையாட மாட்டாரு – அவரே உறுதிப்படுத்திய தகவல் இதோ

ஆனாலும் 2023 உலகக்கோப்பை உட்பட வருங்காலங்களில் நடைபெறும் அனைத்து வெள்ளைப்பந்து போட்டிகளிலும் முதன்மை வீரராக இலங்கையின் வெற்றிகளில் பங்காற்றுவதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். எனவே ஒருவரால் அனைத்து வகையான போட்டிகளிலும் விளையாட முடியாது என்பதுடன் ஒரு வகையான கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்தால் புத்துணர்ச்சியுடன் எஞ்சிய கிரிக்கெட்டில் அசத்தும் நன்மையை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement