
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்றது ரசிகர்களுக்கு மறக்க முடியாத நினைவாக அமைந்தது. கடந்த மாதம் அமெரிக்காவில் துவங்கி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நிறைவு பெற்ற அத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் அசத்திய இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை வென்றது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவை இறுதிப்போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பை வென்றது.
அந்த வெற்றியுடன் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றனர். அதே போல வீரராக வெல்லாத உலகக் கோப்பையை பயிற்சியாளராக வென்று ஜாம்பவான் ராகுல் டிராவிட் விடை பெற்றார். இந்நிலையில் ஃபைனலில் 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்ட போது இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியதாக விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
மகத்தான வெற்றி:
ஆனால் அங்கிருந்து போராடி வென்றது இந்திய அணியின் கேரக்டரை காட்டுவதாக அவர் பாராட்டியுள்ளார். அத்துடன் கோப்பையை வென்று ராகுல் டிராவிட் கையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி கொடுத்தது நெஞ்சை தொடும் செயலாக அமைந்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியது பின்வருமாறு. “தென்னாப்பிரிக்காவுக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது நாம் ஃபினிஷிங் செய்த விதம் அபாரமாக இருந்தது”
“அங்கிருந்து தன்னம்பிக்கையுடன் போராடி தோல்வியிலிருந்து மீண்டெழுந்து வெற்றி பெற்றது மொத்த இந்திய அணியின் கேரக்டரை காட்டுகிறது. அதற்காக செய்த கடின உழைப்பு நம் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் வெளிப்படுத்திய கொண்டாட்டத்தில் தென்பட்டது. உலகக் கோப்பை வெல்வது கண்டிப்பாக ஸ்பெஷல் உணர்வு. அதனுடைய உணர்வை நமது அணியில் இருந்த ஒவ்வொருவரும் காண்பித்தனர்”
“ஹர்திக் பாண்டியா கடைசிப் பந்தை வீசியதும் கண்ணீர் விட்டு அழுததையும் ரோஹித் சர்மா மைதானத்திலேயே விழுந்ததையும் நீங்கள் பார்த்தீர்கள். மொத்த நாடும் அந்த வெற்றியால் மகிழ்ச்சியடைந்தது. குறிப்பாக கடந்த உலகக் கோப்பையில் நாம் அபாரமாக விளையாடியும் ஃபைனலில் தோல்வியை சந்தித்தோம். ராகுல் டிராவிட்டுடன் நான் நிறைய கிரிக்கெட்டை விளையாடியுள்ளேன்”
இதையும் படிங்க: இந்தியாவை ஈஸியா வீழ்த்திருப்போம்.. இதனால மிஸ் ஆகிடுச்சு.. 2007 டி20 உ.கோ தோல்வி பற்றி மிஸ்பா வருத்தம்
“ஆனால் கடைசிப் பந்து வீசியதும் அவர் தன்னுடைய உச்சகட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். அவரிடம் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் கோப்பையை கையில் கொடுத்தது நெஞ்சைத் தொட்ட சிறப்பான செயலாக அமைந்தது. அதை அவர் கொண்டாடிய விதம் இந்த வெற்றி ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டியது” என்று கூறினார். அத்துடன் ஓய்வு பெற்ற விராட், ரோகித், ஜடேஜா ஆகியோர் இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாகத் திகழ்ந்து தொடர்ந்து ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்துவார்கள் என்றும் லக்ஷ்மன் வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.