ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிவடைந்த கையோடு ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் :
இதன் காரணமாக நவம்பர் மாதம் ஆரம்பத்தில் இரு வாரங்களுக்கு முன்னதாகவே இந்திய அணி ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதே வேளையில் இந்த இடைப்பட்ட காலத்தில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு செல்லும் இந்திய அணியானது நவம்பர் எட்டாம் தேதி முதல் அங்கு நடைபெற இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் அங்கு பயணிக்க உள்ளதால் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு அவரால் செல்ல முடியாது.
இதன் காரணமாக இந்த தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கம்பீர் ஆஸ்திரேலியா செல்லும் பட்சத்தில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கும் வி.வி.எஸ் லக்ஷ்மணன் தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.
ஏனெனில் முதன்மை இந்திய அணி ஆஸ்திரேலிய நாட்டிற்கு செல்லும் பட்சத்தில் இரண்டாம் தர இந்திய அணியானது தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. கம்பீருக்கு முன்னதாக டிராவிட் பயிற்சியாளராக இருக்கும்போது கூட இரண்டாம் கட்ட அணி எங்கு பயணித்தாலும் அந்த தொடருக்கு லட்சுமணன் பயிற்சியாளராக செல்வார்.
இதையும் படிங்க : இனி அனுபவ வீரர்களே வேணாம்.. புதிய கேப்டனை அறிவித்து அதிரடி காட்டிய – பாகிஸ்தான் வாரியம்
அதே பாணியை தான் தற்போது பிசிசிஐ இந்த தொடருக்கும் பயன்படுத்த இருக்கிறது. கம்பீர் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வேளையில் வி.வி.எஸ் லட்சுமணன் தனது குழுவுடன் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியுடன் பயிற்சியாளராக அங்கு செல்வார் என்று கூறப்படுகிறது.



