
இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் தங்களது அணிக்காக கோப்பையை வெல்லும் முனைப்புடன் நிறைய வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்தி போராடி வருகின்றனர். பொதுவாகவே டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக ஓடி அதிரடியாக செயல்பட்டு வெற்றி காண்பதற்கு நல்ல ஃபிட்னஸ் அவசியமாகிறது. அதை சீனியர் வீரர்களால் கடைப்பிடிக்க முடியாது என்பதால் ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் எப்போதுமே இளம் வீரர்களுக்கானதாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் அனுபவமே சிறந்த ஆசான் என்ற பழமொழிக்கேற்ப தங்களுடைய அனுபவத்தால் வயதை நம்பராக்கும் வகையில் எம்எஸ் தோனி, ரகானே, மோஹித் சர்மா, பியூஸ் சாவ்லா போன்ற மூத்த நட்சத்திர வீரர்கள் இதே ஐபிஎல் தொடரில் இளம் வீரர்களுக்கு சவாலை கொடுக்கும் அளவுக்கு அசத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் லக்னோ அணியில் நட்சத்திர இந்திய அனுபவ வீரர் அமித் மிஸ்ரா 40 வயதை கடந்தாலும் இதுவரை வாய்ப்பு பெற்ற 7 போட்டிகளில் 7 விக்கெட்களை 7.15 என்ற நல்ல எக்கனாமியில் பதிவு செய்து அசத்தி வருகிறார். ஹரியானவைச் சேர்ந்த அவர் கடந்த 2003இல் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாக 2017 வரை 3 வகையான கிரிக்கெட்டிலும் 66 போட்டிகளில் விளையாடி 154 விக்கெட்களை எடுத்துள்ளார்.
சேவாக் ஆலோசனை:
மேலும் ஐபிஎல் துவங்கப்பட்ட 2008 முதலே தனது அற்புதமான சுழலால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து ஜாம்பவானாக போற்றும் அளவுக்கு 173 விக்கெட்களை எடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக ஐபிஎல் வரலாற்றில் அதிக ஹாட்ரிக் (3) எடுத்த பவுலராக சாதனை படைத்துள்ள அவர் இந்த சீசனில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். ஆனாலும் 40 வயதை கடந்து விட்டதால் அடுத்த சீசனில் அவர் விளையாடுவாரா என்பதும் லக்னோ அணி மீண்டும் தக்கவைக்குமா என்பதும் சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் எவ்வளவு வயதானாலும் ஒரு வீரருக்குள் இருக்கும் திறமை எங்கும் போகாது என்று தெரிவிக்கும் சேவாக் வயதை நம்பராக்கி தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதற்கு அமித் மிஸ்ரா நல்ல ஃபிட்னெஸை கடைபிடிக்க வேண்டுமேன்று கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக தோனி, ரோஹித் போன்றவர்களைப் போல் நல்ல ஃபிட்னஸ் கடைபிடித்து அவர் இன்னும் ஓரிரு வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை விரும்புவதாக தெரிவிக்கும் சேவாக் அதற்கான உதவி தேவைப்பட்டால் தமக்கு போன் செய்யுமாறு வெளிப்படையாக கூறியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
“அவருடைய திறமை எங்கேயும் போகாது. இருப்பினும் வயது அதிகரிக்கும் போது உங்களுடைய வேகம் குறையும். அது போன்ற சூழ்நிலையில் பேட்ஸ்மேன்கள் 20 ஓவர்கள் ஃபீல்டிங் செய்ய வேண்டும் என்பதால் ஓய்வு பெறுவார்கள். ஒருவேளை இன்றும் நீங்கள் மகத்தான சுனில் கவாஸ்கரிடம் பேட்டை கொடுத்தால் அவர் சிறப்பான ஷாட்டுகளை அடிப்பார். ஆனால் ரன்கள் எடுப்பதற்கு ஓடுவதும் ஃபீல்டிங் செய்வதும் முன்பு போல் இருக்காது. இருப்பினும் அனைத்து வீரர்களிடமும் நான் முடிந்த வரை உங்களுடைய கேரியரை நீட்டியுங்கள் என்று சொல்வேன்”
“அந்த வகையில் மிஸ்ராவிடம் இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அதற்காக அவர் தன்னை மாற்றிக்கொண்டு தனது கேரியரை நீட்டிக்கலாம். அதை ஏற்கனவே தோனி, ரோஹித், விராட் மற்றும் தவான் போன்றவர்கள் செய்து வருகின்றனர். அவர்களைப் போலவே உங்களாலும் இன்னும் 1 அல்லது 2 வருடம் கேரியரை நீட்டிக்க முடியும். ஆனால் அவை அனைத்திற்கும் நல்ல ஃபிட்னஸ் அவசியமாகும். எனவே மிஸ்ரா ஜி இதை நீங்கள் கேட்டால் அடுத்த வருடம் தொடர்ந்து விளையாடுங்கள்”
இதையும் படிங்க:வயசான விராட், ரோஹித்தை டி20 அணியில் கழற்றி விட்டு இளம் ரத்தத்தை பாய்ச்சும் நேரம் வந்தாச்சு – முன்னாள் வீரர் அதிரடி
“அதற்காக சற்று கடினமாக உழையுங்கள். ஒருவேளை உங்களால் முடியவில்லை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்ய தயாராக இருக்கிறேன்” என்று கூறினார். அவர் கூறுவது போல 41 வயதை கடந்த தோனியே சிறந்த ஃபிட்னஸ் காரணமாக முழங்கால் வலியுடன் தொடர்ந்து அசத்தும் போது 40 வயதாகும் மிஸ்ரா அதைப் பின்பற்றினால் மீண்டும் அடுத்த வருடம் விளையாடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.