
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை மையப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 கோப்பைகளை வென்றுள்ளது. அதனால் மும்பைக்கு நிகராக வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ள சென்னை 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ளது. அத்துடன் இதுவரை விளையாடிய 14 சீசன்களில் 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற சென்னை 10 ஃபைனல்களில் விளையாடியுள்ளது.
அந்த வகையில் மும்பையை விட கண்சிஸ்டென்சி எனும் பெயருக்கு அடையாளமாக சென்னை திகழ்கிறது என்றே சொல்லலாம். அந்த அணியின் இந்த வெற்றிகளுக்கு முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி முக்கிய காரணமாக திகழ்கிறார் என்பது யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஏனெனில் இந்தியாவை போலவே 2008 முதல் அனைத்து வீரர்களையும் சிறப்பாக வழி நடத்திய அவர் சிறந்த கேப்டனாகவும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் ஃபினிஷராகவும் சென்னையின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்.
சிஎஸ்கே கேப்டன் சேவாக்:
முன்னதாக 2008இல் ஐபிஎல் துவங்கப்பட்ட போது கொல்கத்தாவுக்கு கங்குலி, மும்பைக்கு சச்சின் என அந்தந்த மாநிலங்களில் இருந்த நட்சத்திர வீரர்கள் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் தமிழ்நாட்டில் அந்த நேரத்தில் அப்படியொரு வீரர் இல்லாததால் 2007 டி20 உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எம்.எஸ். தோனி சென்னை அணியின் கேப்டனாக மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டார்.
அதன் பின் நடந்தது அனைத்தும் வரலாறாக மாறியது. இந்நிலையில் 2008இல் சிஎஸ்கே கேப்டனாக விளையாடுமாறு தம்மை அந்த அணியின் தேர்வாளர் விபி சந்திரசேகர் அழைத்ததாக வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். இருப்பினும் கடைசி நேரத்தில் தம்முடைய மாநிலமான டெல்லி நிர்வாகம் ஐகான் பிளேயராக விளையாட அழைத்ததால் அந்த வாய்ப்பு தவறிப் போனதாக சேவாக் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய வானொலி உரையாடலில் அவர் பேசியது பின்வருமாறு.
“சிஎஸ்கே அணியின் வீரர்களை விபி சந்திரசேகர் தேர்வு செய்தார். அப்போது “டெல்லி டேர்டெவில்ஸ் உங்களை ஐகான் வீரராக விளையாட விரும்புகின்றனர். அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள். நீங்கள் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை நாங்கள் விரும்புகிறோம்” என்று அவர் என்னிடம் தொலைபேசியில் அழைத்துச் சொன்னார். அதை ஏற்றுக் கொண்ட நான் சரி பார்ப்போம் என்று பதிலளித்தேன்”
இதையும் படிங்க: ஆஸிக்கு கவலையே இல்ல.. இந்தியா வேற லெவல் டீமா இருந்தாலும் தோல்விக்கு இதான் காரணம்.. மிஸ்பா
“கடைசியில் எனக்கு டெல்லி டேர்டேவில்ஸ் அணியில் ஐகான் வீரராக விளையாடுவதற்கு ஆஃபர் வந்தது. அதை நான் ஏற்றுக் கொண்டதால் நேரடி ஏலத்திற்கு செல்லவில்லை. ஒருவேளை ஏலத்தில் நானும் பங்கேற்றிருந்தால் சிஎஸ்கே என்னை வாங்கி கேப்டனாக அறிவித்திருப்பார்கள். இருப்பினும் பின்னர் அவர்கள் எம்எஸ் தோனியை வாங்கி அவர்களுடைய கேப்டனாக நியமித்தனர்” என்று கூறினார்.