இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி துவங்கும் ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் உலகின் முன்னணி அணிகள் பங்கேற்று கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த இருப்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அதோடு நாளுக்கு நாள் இந்த உலககோப்பை தொடர் குறித்த செய்திகளும் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அதேபோன்று கடந்த 2011-ஆம் ஆண்டு 50 ஓவர் உலககோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி அதன்பிறகு நடைபெற்ற 2015 மற்றும் 2019 50 ஓவர் உலகக்கோப்பையை தவறவிட்ட வேளையில் தற்போது மீண்டும் இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த 50 ஓவர் உலககோப்பை தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இந்த தொடரானது துவங்க இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் இந்த உலகக் கோப்பை தொடர் குறித்த பல்வேறு கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் இந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு செல்லும்? என்பது குறித்த தனது கணிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
இது குறித்து சேவாக் கூறுகையில் : நான் இந்த தொடரின் அரையிறுதிக்கு செல்லும் நான்கு அணிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை தான் தேர்வு செய்வேன். ஏனெனில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் எப்போதுமே உலகக் கோப்பை தொடரில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய அணிகள்.
நிச்சயம் அவர்களால் நல்ல கிரிக்கெட்டை வெளிப்படுத்தி அரையிறுதி வரை முன்னேற முடியும். அதேபோன்று இம்முறை உலகக் கோப்பை தொடரானது இந்தியாவில் நடைபெற இருப்பதால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு வாய்ப்பு மிக அதிகம். அதேபோன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் துணை கண்டத்தில் நடக்கும் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : இந்திய அணியில் அவர் இல்லாதது தற்போது இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பு – நாசர் ஹுசேன் கருத்து
அந்த இரண்டு அணிகளுமே கடந்த சில ஆண்டுகளாகவே மிகச் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி வருவதால் கட்டாயம் அவர்களும் அரையிறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளதாக சேவாக் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.