ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச 20 ஓவர் போட்டிகளின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரில் ரோகித் சர்மா இந்தியாவை அற்புதமாக வழி நடத்தினார். அவருடைய தலைமையில் ஆரம்பம் முதலே தோல்வியை சந்திக்காமல் மிரட்டிய இந்தியா இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது.
அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்று இந்தியா சாதனை படைத்தது. அந்தத் தொடருடன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து இளம் வீரர்களுக்கு வழி விடுவதற்காக ஓய்வு பெற்றனர். அதில் 37 வயதை கடந்த ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் டி20 அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு காணப்படுகிறது.
சேவாக்கின் தேர்வு:
அது போன்ற சூழ்நிலையில் கடந்த சில வருடங்களில் ரோஹித் இல்லாத போது ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் டி20 கேப்டன்களாக செயல்பட்டனர். அதில் 2022 ஐபிஎல் கோப்பையை வென்ற அனுபவமிக்க ஹர்திக் பாண்டியா அடுத்த டி20 கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்ததாக நடைபெறும் ஜிம்பாப்வே தொடருக்கு இளம் வீரர் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
எனவே ரோஹித் சர்மா விலகும் போது அவர் இந்தியாவின் அடுத்த டி20 கேப்டனாக செயல்படுவதற்கு தகுதியானவர் என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். அதற்கான காரணம் பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அவருக்கு (கில்) கடந்த வருடம் சிறப்பாக அமைந்தது. துரதிஷ்டவசமாக அவர் 2024 டி20 உலகக் கோப்பையை தவற விட்டார்”
“என்னைப் பொறுத்த வரை அவரை கேப்டனாக நியமித்துள்ளது சரியான முடிவு. நாளை ரோஹித் சர்மா விலகும் போது சுப்மன் கில் கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்பதற்கு சரியானவர்” என்று கூறினார். முன்னதாக கடந்த சில வருடங்களாகவே 3 வகையான இந்திய அணியிலும் நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு ஒரு பேட்ஸ்மேனாக சுப்மன் கில் அசத்தி வருகிறார்.
இதையும் படிங்க: 2024இல் 125 கோடி கொடுத்த பிசிசிஐ.. 2011 உ.கோ வென்ற இந்திய அணிக்கு கொடுத்த பரிசுத்தொகை எவ்வளவு?
இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் பலமுறை விமர்சனங்களை சந்தித்துள்ளது. அத்துடன் 2024 ஐபிஎல் தொடரில் அவருடைய தலைமையில் குஜராத் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. எனவே வரும் காலங்களில் ரோஹித் சர்மாவின் இடத்தை நிரப்பும் அளவுக்கு சுப்மன் கில் செயல்படுவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இதைத் தொடர்ந்து ஜூலை 6ஆம் தேதி ஜிம்பாப்பே டி20 தொடர் துவங்குவது குறிப்பிடத்தக்கது.



