
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் 9 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது. குறிப்பாக ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றப் போட்டியில் ஹைதராபாத்தை அதனுடைய சொந்த ஊரில் மும்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அப்போட்டியில் 144 ரன்களை துரத்திய மும்பைக்கு ரோஹித் சர்மா 70, சூரியகுமார் 40* ரன்கள் அடித்து வெற்றி பெற உதவினர்.
முன்னதாக மும்பைக்கு 5 கோப்பைகளை கேப்டனாக வெல்ல உதவிய ரோகித் சர்மா சமீப காலங்களாகவே ஐபிஎல் தொடரில் சுமாராக விளையாடி வந்தார். அதனால் ரோஹித் சர்மா பேசாமல் ஓய்வு பெறலாம் என்று வீரேந்திர சேவாக் வெளிப்படையாக விமர்சித்தார். அந்த சூழ்நிலையில் சென்னைக்கு எதிரான கடந்தப் போட்டியில் ரோஹித் 76* ரன்கள் குவித்தார்.
அதனால் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் இந்தப் போட்டியிலும் அரை சதத்தை அடித்துள்ளார். அந்த வகையில் 9 வருடங்கள் கழித்து அடுத்தடுத்த ஐபிஎல் போட்டிகளில் அரை சதங்கள் அடித்து மும்பை அணியின் வெற்றிகளில் பங்காற்றியுள்ள ரோஹித் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இந்நிலையில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் வெளியில் பார்ப்பவர்களுக்கு எளிதாக தெரியும் என்று வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.
ஆனால் சரியானப் பந்தை தேர்ந்தெடுத்து சரியான ஷாட்டை அடித்து ரன்களை குவிக்கும் ரோஹித் சர்மா மும்பைக்கு நல்ல துவக்கத்தைக் கொடுக்கும் கடினமான வேலையை செய்வதாக அவர் பாராட்டியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு விமர்சித்த சேவாக் தற்போது ரோஹித்தை கிரிக்பஸ் இணையத்தில் பாராட்டி பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா தாமதமாக சில அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்”
“கடந்தப் போட்டியில் அவுட்டாகாமல் இருந்த ரோஹித் இந்தப் போட்டியிலும் அவுட்டாகாமல் ஃபினிஷிங் செய்திருந்தால் பேட்டிங் சராசரி இன்னும் உயர்ந்திருக்கும். ரோஹித் சர்மா ஃபார்மை தொடும் போது நம்மால் அவருடைய முற்றிலும் மாறுபட்ட பக்கத்தைப் பார்க்க முடியும். அவர் அசத்தும் போது மும்பை அணியின் இடம் முன்னேறுகிறது. அடுத்து வரும் பேட்ஸ்மேன்களின் வேலையும் எளிதாகிறது”
இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்டில் கோலிக்கு அடுத்து 2 ஆவது இந்திய வீரராக ரோஹித் நிகழ்த்திய மாபெரும் சாதனை – விவரம் இதோ
“கிரிக்கெட் மிகவும் எளிமையான விளையாட்டு என்பது போல ரோஹித்தின் பேட்டிங் இருக்கிறது. இன்றும் அவர் சிரமமே இல்லாமல் பவுண்டரிகளை அடித்தார். அதை வெளியிலிருந்து பார்க்கும் போது எளிதாகத் தோன்றும். ஆனால் அதற்கு நிறைய முயற்சிகள் தேவைப்படும். சரியானப் பந்தை தேர்வு செய்வது, சரியான ஷாட்டை செயல்படுத்துவது போன்ற விஷயங்களில் ரோஹித் சர்மா உண்மையான எண்ணங்களைப் போடுகிறார். அதுவே ரோகித்தை உயர்ந்து நிற்க வைக்கிறது. ஒரு கட்டத்தில் அவர் 200 ரன்கள் அடிக்கும் வேகத்தில் பேட்டிங் செய்தார்” என்று கூறினார்.