சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய அணி என்ற பெயரை பெற்றுள்ளது. சொல்லப்போனால் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளின் உள்ள மைதானங்கள் இயற்கையாகவே சுழலுக்கு சாதகமாக இருக்கும். அதனால் அதில் பிறந்து வளரக்கூடிய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களை நன்றாக எதிர்கொள்வார்கள். அதே சமயம் வேகத்துக்கு சாதமான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் அவர்கள் தடுமாறுவது வழக்கமாகும்.
ஆனால் சமீப காலங்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் வேகத்தை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடுகின்றனர். அதனாலேயே ஆஸ்திரேலிய மண்ணில் 2018 – 19, 2020 – 21 ஆகிய அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களை வென்று இந்தியா சரித்திரம் படைத்தது. ஆனால் தற்போது தங்களுடைய உண்மையான பலமான சுழலுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறுகின்றனர்.
காலம் மாறிடுச்சு:
அதற்கு எடுத்துகாட்டாக 2017 புனே, 2023 இந்தூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியாமல் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதன் உச்சமாக தற்சமயத்தில் தடுமாற்றமாக செயல்பட்டு வரும் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற 2024 ஒருநாள் தொடரில் இந்தியா 27 வருடங்கள் கழித்து தோற்றது. அந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான கொழும்பு மைதானத்தில் இலங்கை ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாததே முக்கிய காரணமாக அமைந்தது.
இந்நிலையில் ஐபிஎல் போன்ற டி20 தொடர்களும் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிகமாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாததுமே இதற்கு காரணம் என்று ஜாம்பவான் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இங்கே அதிகமான வெள்ளைப்பந்து போட்டிகள் நடைபெறுவதும் குறைவான ஸ்பின்னர்கள் வருவதும் இதற்கு ஒரு காரணமாகும்”
சேவாக் விளக்கம்:
“ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் 24 பந்துகளை வீசும் நீங்கள் அதை ஃபிளைட் செய்வதில்லை. அதனால் பேட்ஸ்மேன்களை அவுட்டாக்க நீங்கள் திறனை வளர்ப்பதில்லை. இந்திய வீரர்கள் குறைந்த உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவது மற்றொரு காரணமாகும். சர்வதேசத்தை விட உள்ளூரில் நீங்கள் அதிக ஸ்பின்னர்களை எதிர்கொள்வீர்கள். சொல்லப்போனால் பந்தை பறக்க விட்டு விக்கெட்டுகளை எடுக்கும் தரமான ஸ்பின்னர்களும் இந்தியாவில் தற்போது இல்லை என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க: 5 டக் 10க்கு ஆல் அவுட்.. 5 பந்தில் முடிந்த போட்டி.. ஆர்சிபி’யை மிஞ்சிய மங்கோலியா மோசமான உலக சாதனை
“எங்கள் காலத்தில் டிராவிட், சச்சின், கங்குலி, லக்ஷ்மன், யுவராஜ் போன்ற அனைவரும் நிறைய உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவோம். அதனால் நாங்கள் ஸ்பின்னர்களை அதிகமாக எதிர்கொண்டு விளையாடுவோம். ஆனால் அட்டவணை பிசியாக இருப்பதால் வீரர்களுக்கு குறைந்த நேரமே கிடைக்கிறது. நிறைய லீக் தொடர்கள் நடைபெறுவதால் ஸ்பின்னர்கள் தங்களுடைய திறனை முன்னேற்றுவதில்லை” என்று கூறினார்.