ஐசிசி 2025 சாம்பியன்ஸ் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. அதையும் சேர்த்து 3 சாம்பியன்ஸ் டிராபிகளை வென்ற முதல் அணியாக இந்தியா உலக சாதனை படைத்தது. ஏற்கனவே கடந்த வருடம் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையையும் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா வென்றது.
அதன் வாயிலாக தோனிக்குப் பின் ஒன்றுக்கும் மேற்பட்ட ஐசிசி கோப்பைகளை வென்ற கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். அந்தத் தொடரில் ஆரம்பம் முதலே தம்மைப் பற்றி கவலைப்படாமல் அதிரடியாக விளையாட முயற்சித்த அவர் பெரிய ரன்கள் குவிக்கவில்லை. ஆனால் முக்கியமான இறுதிப் போட்டியில் 76 ரன்கள் குவித்த ரோஹித் ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
தோனிக்கு பின்:
இந்நிலையில் தோனிக்குப்பின் ஒன்றுக்கும் மேற்பட்ட ஐசிசி கோப்பைகளை வென்றுள்ள ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப்பை குறைத்து மதிப்பிடக் கூடாது என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். மேலும் தம்மைப் பற்றி கவலைப்படாமல் அணியைப் பற்றி சிந்தித்து விளையாடும் ரோஹித் 2027 டி20 உலகக் கோப்பையில் விளையாடி நாட்டுக்காக சாம்பியன்ஸ் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது.
“நாம் அவரின் கேப்டன்ஷிப்பை அண்டர்ரேட் செய்கிறோம். ஆனால் இந்த 2 கோப்பைகள் வென்றதன் வாயிலாக தோனிக்குப் பின் ஒன்றுக்கும் மேற்பட்ட ஐசிசி கோப்பைகளை வென்ற 2வது இந்திய கேப்டனாக அவர் சாதித்துள்ளார். அவர் தனது அணியை வழி நடத்தி, வீரர்களை கையாண்டு, பவுலர்களை பயன்படுத்தி, தொடர்பு கொள்ளும் விதம் தெளிவாக இருக்கிறது”
சேவாக் பாராட்டு:
“அர்ஷ்தீப்புக்கு பதிலாக ஆரம்பத்திலேயே ராணா கொண்டு வருவதாக இருக்கட்டும், பின்னர் அவருக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தியை கொண்டு வந்ததாக இருக்கட்டும். ரோகித் சர்மா தனது அணி வீரர்களிடம் தெளிவான தொடர்பைக் கொண்டுள்ளார். அது மிகவும் முக்கியம். அதனாலேயே ரோகித் சிறந்த கேப்டனாக திகழ்கிறார்”
இதையும் படிங்க: அவங்க 2 பேர் இந்திய அணியில் இருக்கும் வரை எதிரணியினர் இந்தியாவை பாத்தாலே பயப்படுவாங்க – திலீப் வெங்சர்க்கார்
“ரோகித் சர்மா தன்னைப் பற்றி குறைவாகவும் இந்திய அணி மற்றும் இந்திய வீரர்களைப் பற்றி அதிகமாகவும் சிந்திக்கிறார். ஒரு வீரர் இந்திய அணியில் பாதுகாப்பாக இல்லை என உணர்ந்தால் அவரிடமிருந்து நல்ல செயல்பாடு வராது என்பதை ரோகித் புரிந்துள்ளார். அதனாலேயே அவர் இந்திய அணியில் எந்த வீரரையும் அவ்வாறு உணர விடுவதில்லை. அனைவரையும் அவர் தன்னுடன் அழைத்துச் செல்கிறார். அந்தப் பண்புகளே ஒரு சிறந்த கேப்டன் மற்றும் தலைவருக்கு தேவை. ரோகித் சர்மா அதை நன்றாக செய்கிறார்” என்று கூறினார்.