விராட் கோலி மாதிரி திறமையான அவர்தான் இந்த டி20 உ.கோ’யில் அதிக ரன்கள் எடுப்பாரு – சேவாக் அதிரடி கணிப்பு

Kohli-1 Sehwag
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் விளையாடும் கடைசி 4 அணிகளை தீர்மானிக்கும் முதல் சுற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதை தொடர்ந்து வரும் அக்டோபர் 22ஆம் தேதி முதல் துவங்கும் சூப்பர் 12 சுற்றில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா உட்பட முதன்மை அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் வேகத்துக்கு கை கொடுக்கக்கூடிய ஆஸ்திரேலிய மைதானங்களில் எந்தளவுக்கு வேகப்பந்து வீச்சு எடுபடுமோ அதே அளவுக்கு வேகம், பவுன்ஸ் ஆகியவற்றை சரியாக கணித்து அடிக்கும் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்களை குவிக்கலாம்.

Suryakumar Yadav 1

- Advertisement -

அந்த வகையில் இந்த வருடம் ஆஸ்திரேலிய சூழ்நிலைகளை பயன்படுத்தி அதிக ரன்களைக் குவித்து தங்களது அணிக்கு வெற்றிக் கோப்பையை வென்று கொடுக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் நிலவுகிறது. அதில் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் மைதானத்தின் நாலாபுறமும் சுழன்றடிக்கும் திறமையுடன் தற்போது உச்சக்கட்ட பார்மில் இருக்கும் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் ஆஸ்திரேலிய மண்ணிலும் முத்திரை பதித்து அதிக ரன்களைக் குவித்து வெற்றியைப் பெற்றுக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதேபோல் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் கொண்ட ஜோஸ் பட்லர், பாபர் அசாம், சொந்த மண்ணில் டேவிட் வார்னர் ஆகியோரும் அதிக ரன்களை குவிக்குப் போகும் பேட்ஸ்மேன்களாகக் கருதப்படுகின்றனர்.

சேவாக் கணிப்பு:
அதில் குறிப்பாக 2014, 2016 ஆகிய அடுத்தடுத்த உலக கோப்பைகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேனாக சாதனை படைத்து அடுத்தடுத்த தொடர் நாயகன் விருதுகளை வென்ற விராட் கோலி ஏற்கனவே ஆஸ்திரேலிய மண்ணில் ஏராளமாக விளையாடி ரன்களையும் சாதனைகளையும் படைத்துள்ளதால் இம்முறையும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் சமீபத்தில் சதமடித்து பார்முக்கு திரும்பியுள்ள அவருக்கு ஆஸ்திரேலியாவில் விளையாட மிகவும் பிடிக்கும் என்பதால் இம்முறை அதிக ரன்கள் குவிக்கும் பேட்ஸ்மேனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Babar-Azam-and-Virat-Kohli

ஆனால் விராட் கோலியை போலவே சமீப காலங்களில் பொறுமையும் திறமையையும் வெளிப்படுத்தி அசத்தலாக செயல்பட்டு வரும் பாகிஸ்தானின் கேப்டன் பாபர் அசாம் தான் இம்முறை அதிக ரன்களை குவிக்கும் பேட்ஸ்மேனாக இருப்பார் என்று முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் கணித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அது பாகிஸ்தானிலிருந்து பாபர் அசாமாக இருப்பார். அவர் அசாதாரணமான திறமை மிக்கவர். அவர் பேட்டிங் செய்வதை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும் விராட் கோலி பேட்டிங் செய்யும் போது எப்படி பொறுமையும் நுண்ணறிவும் காணப்படுமோ அதே போன்ற உணர்வு பாபர் அசாம் பேட்டிங் செய்யும் போதும் நமக்கு தோன்றுகிறது” என்று கூறினார்.

- Advertisement -

அதே நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் சேவாக் கூறுவது போல இம்முறை பாபர் அசாம் தான் அதிக ரன்கள் அடிப்பார் என்று ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த வருட டி20 உலகக் கோப்பையில் நானும் பாபர் அசாமை தேர்வு செய்கிறேன். பாகிஸ்தானின் தொடக்க வீரராக அவர் அபாரமான பேட்ஸ்மேன். குறிப்பாக முஹம்மது ரிஸ்வான் உடன் இணைந்து பாகிஸ்தான் டாப் ஆர்டரில் அவர் பலத்தை சேர்கிறார். மேலும் பாபர் அசாம் தொடர்ச்சியாக ரன்களை குவிக்கும் திறமையை பெற்றுள்ளார்” என்று கூறினார்.

Sehwag

அவர்கள் கூறுவது போல விராட் கோலி பார்மை இழந்த 2019க்குப்பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்று அனைவரும் போற்றும் அளவுக்கு அவரையும் மிஞ்சும் வகையில் பேட்டிங் செய்த பாபர் அசாம் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்தார். மேலும் சமீபத்திய ஆசிய கோப்பையில் பார்மை இழந்தாலும் அதன்பின் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் சதமடித்து பார்முக்கு திரும்பியுள்ள அவர் விராட் கோலி போலவே பொறுமையும் நிதானமும் கடைசியில் அதிரடியும் கலந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி பெரிய ரன்களை சேர்ப்பவராக இருக்கிறார். எனவே கடந்த உலக கோப்பையில் செய்ததை இம்முறையும் அவர் செய்வாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement