ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இருப்பினும் சிட்னியில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் 9 விக்கெட் வித்யாசத்தில் இந்தியா எளிதாக வென்றது. அதனால் ஒயிட்வாஸ் அவமானத் தோல்வியை சந்தித்த இந்தியா புதிய கேப்டன் கில் தலைமையில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது.
அக்டோபர் 25ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 237 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய இந்தியா 38.3 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா சதத்தை அடித்து 121*, விராட் கோலி 74* ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தனர்.
கிங் கோலியின் சாதனைகள்:
குறிப்பாக முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து டக் அவுட்டான விராட் கோலி 3வது போட்டியில் 74* ரன்கள் அடித்து அசத்தினார். அதனால் 2027 உலகக் கோப்பைக்கு முன் தங்களைக் கழற்றி விட நினைக்கும் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழுவுக்கு விராட், ரோஹித் ஆகியோர் பதிலடி கொடுத்துள்ளனர். இப்போட்டியையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 14255 ரன்கள் அடித்துள்ளார்.
இதன் வயயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 2வது அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா வாழ்நாள் சாதனையை உடைத்த விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர்: 18426
2. விராட் கோலி: 14255*
3. குமார் சங்கக்காரா: 14234
சேஸ் மாஸ்டர்:
ஒருநாள் கிரிக்கெட்டில் சேசிங் செய்யப்பட்ட போட்டிகளில் அதிக முறை 50+ ரன்கள் அடித்த வீரர் சச்சின் டெண்டுல்கர் சாதனையை உடைத்துள்ள விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல் (இன்னிங்ஸ்):
1. விராட் கோலி: 70* (161)
2. சச்சின் டெண்டுல்கர்: 69 (232)
3. ரோஹித் சர்மா: 55* (153)
4. ஜேக் காலிஸ்: 50 (158)
5. கிறிஸ் கெய்ல்: 46 (152)
மேலும் ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் சேர்த்து விராட் கோலி 18443 ரன்கள் குவித்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்துள்ள விராட் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. விராட் கோலி: 18443*
2. சச்சின் டெண்டுல்கர்: 18436
3. குமார் சங்கக்காரா: 15616
4. ரோஹித் சர்மா: 15601
5. மகிலா ஜெயவர்த்தனே: 14143
இதையும் படிங்க: 38 வயதில் தோனியை முந்திய ஹிட்மேன் ரோஹித்.. ஆஸியில் 2 வரலாற்று சாதனை.. கம்பீருக்கு பதிலடி
இது போக ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டிகளில் 6000+ ரன்களை அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். அவரைத் தவிர்த்து வேறு யாரும் 5000 ரன்கள் கூட அடித்ததில்லை.



