மீண்டும் ஏமாற்றம் ! கடவுளே சோதனை தாங்கல – விரக்தியில் புலம்பிய விராட் கோலி

Virat Kohli 20
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 13-ஆம் தேதி நடைபெற்ற 60-ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் சந்தித்தன. ப்ராபோர்ன் மைதானத்தில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்தாலும் அதிரடியாக பேட்டிங் செய்து 209 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு ஜானி பேர்ஸ்டோ – ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களமிறங்கிய 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளமிட்ட நிலையில் 21 (15) ரன்களில் தவான் அவுட்டானார்.

அடுத்து வந்த பனுக்கா ராஜபக்சா 1 (3) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற மறுபுறம் தொடர்ந்து அதிரடி காட்டிய ஜானி பேர்ஸ்டோ 4 பவுண்டரி 2 சிக்சருடன் வெறும் 29 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் லியம் லிவிங்ஸ்டன் அதிரடியாக ரன்களை குவிக்க மறுபுறம் வந்த மயங்க் அகர்வால் 19 (16) ஜிதேஷ் சர்மா 9 (5) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். ஆனாலும் அதிரடியை கைவிடாத லிவிங்ஸ்டன் 5 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 70 (42) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தார். பெங்களூர் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

பெங்களூரு தோல்வி:
அதை தொடர்ந்து 210 என்ற பெரிய இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு நட்சத்திர வீரர் விராட் கோலி 2 பவுண்டரி 1 சிக்சருடன் அதிரடியாக 20 (16) ரன்களை எடுத்தாலும் மீண்டும் அவுட்டாகி ஏமாற்ற அடுத்த ஓவரிலேயே கேப்டன் டுப்லஸ்ஸிஸ் 10 ரன்களில் நடையைக் கட்டினார். அடுத்து வந்த மகிபால் லோம்ரோர் 6 (3) ரன்களில் அவுட்டானதால் 40/3 என ஆரம்பத்திலேயே பெங்களூரு தடுமாறியது. அந்த சூழ்நிலையில் ஜோடி சேர்ந்த கிளன் மேக்ஸ்வெல் – ரஜத் படிடார் 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக தங்களது அணியை மீட்டெடுக்க போராடினார்கள்.

ஆனால் மேக்ஸ்வெல் 35 (22) ரஜத் படிடார் 26 (21) என பெரிய ரன்களை எடுக்க விடாமல் அடுத்தடுத்த ஓவர்களில் காலி செய்த பஞ்சாப் அந்த அணியின் ஃபினிஷர் தினேஷ் கார்த்திக்கை 11 (11) ரன்களிலும் சபாஸ் அஹமதை 9 (14) ரன்களிலும் அவுட் செய்து வெற்றியை உறுதி செய்தது. இறுதிவரை 20 ஓவர்களில் 155/9 ரன்களை மட்டுமே எடுத்த பெங்களூரு பரிதாபமாக தோற்றது. பஞ்சாப் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அசத்திய ரபாடா 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதனால் வாழ்வா – சாவா என்ற இப்போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை சுவைத்த பஞ்சாப் பங்கேற்ற 12 போட்டிகளில் 6-வது வெற்றியை பதிவு செய்து ப்ளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -

வேதனையில் விராட்:
மறுபுறம் பங்கேற்ற 13 போட்டிகளில் 6-வது தோல்வியை பதிவு செய்த பெங்களூரு 4-வது இடத்தில் நீடிப்பதுடன் அந்த அணியின் பிரகாசமான பிளே ஆஃப் சுற்று வாய்ப்பும் மந்தமாகியுள்ளது. ஏற்கனவே சுமாரான பார்மில் திணறி வரும் விராட் கோலி இப்போட்டியில் அதிரடியான தொடக்கத்தை பெற்றாலும் மீண்டும் 20 ரன்களில் அவுட்டானார். இந்தியாவுக்கும் ஐபிஎல் தொடரிலும் ஒரு ரன் மெஷினாக அறியப்படும் அவர் கடந்த 2019க்கு பின்பு டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என 106* போட்டிகளாக 3 வருடங்களுக்கு மேலாக சதம் அடிக்க முடியாமல் மோசமான பார்மில் திண்டாடி வருகிறார்.

அதிலும் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வருடம் 3 முறை கோல்டன் டக் அவுட்டான அவரின் உடலிலும் ஆட்டத்திலும் தொய்வு காணப்படுவதால் 2 – 3 மாதங்கள் ஓய்வு எடுத்துவிட்டு புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்புமாறு பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனாலும் விமர்சனங்களுக்கு பின்வாங்காமல் தொடர்ந்து விளையாடுவேன் என்று பதிலளித்த விராட் கோலி பார்முக்கு திரும்ப கடுமையான முயற்சியில் வருகிறார்.

கடவுளே சோதனை:
அதற்காக ஒவ்வொரு போட்டியிலும் கடுமையாக பயிற்சி எடுத்து பெரிய ரன்களை அடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கும் அவர் ஏதேனும் ஒரு வகையில் அதிர்ஷ்டத்தின் உதவியின்றி அவுட்டாகி விடுகிறார். குறிப்பாக நேற்றைய போட்டியில் அவுட்டானபோது வானத்தை பார்த்து “கடவுளே இன்னும் எத்தனை சோதனை, தாங்கமுடியல” என்பதுபோல் வேதனையுடன் வலியுடன் விரக்தியுடன் புலம்பிக்கொண்டே அவர் பெவிலியன் சென்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதனால் பல ரசிகர்களும் மனமுடைந்துள்ள நிலையில் அவரின் அந்த புலம்பல் பற்றி கேப்டன் டு பிளசிஸ் போட்டி முடிந்த பின் பேசியது பின்வருமாறு. “அவர் அவுட்டாவதற்கு சாத்தியமான அனைத்து வகைகளிலும் அவுட்டாகிறார். அவர் தம்மால் முடிந்த அளவுக்கு கடினமாக உழைத்து நேர்மறையான சிந்தனைகளுடன் இருக்க முயற்சிக்கிறார். இன்று ஒருசில சிறப்பான ஷாட்களை அடித்த அவர் அதை அப்படியே தொடருவார். இதுபோன்ற மோசமான தருணங்கள் அனைவருக்குமே ஏற்படுவது சகஜமானது” என்று ஆதரவாகப் பேசினார்.

Advertisement