விஜய் ஹசாரே கோப்பை 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்காக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 12 வருடங்கள் கழித்து விளையாடினார். அதில் ஆந்திராவுக்கு எதிரான 299 சேசிங்கில் சிறப்பாக விளையாடிய அவர் சதமடித்து 131 ரன்கள் குவித்து டெல்லி வெற்றி பெற உதவினார். அதைத் தொடர்ந்து டிசம்பர் 26ஆம் தேதி டெல்லி தங்களது இரண்டாவது போட்டியில் குஜராத்தை எதிர்கொண்டது.
பெங்களூருவில் காலை 9 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லிக்கு துவக்க வீரர்கள் பிரியான்ஸ் ஆர்யா 1, அர்பித் ராணா 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். இருப்பினும் 3வது இடத்தில் களமிறங்கிய விராட் கோலி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
விராட் கோலி அசத்தல்:
அடுத்து வந்த நிதீஸ் ராணா 12 ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் அபாரமாக விளையாடிய விராட் கோலி 29 பந்துகளில் அரை சதமடித்தார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் ரிசப் பண்ட் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்திய விராட் கோலி 13 பவுண்டரி 1 சிக்சருடன் 77 (61) ரன்கள் குவித்து அவுட்டானார்.
அடுத்து வந்த ஆயுஷ் படோனி 12 ரன்னில் நடையைக் கட்டினாலும் எதிர்ப்புறம் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ரிசப் பண்ட் அரை சதமடித்து 8 பௌண்டரி 2 சிக்ஸருடன் 70 (79) ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் ஹரிஷ் தியாகி 40, சிம்ரன்ஜித் சிங் 15* ரன்களை அடித்த உதவியுடன் 50 ஓவரில் டெல்லி 254/9 ரன்கள் குவித்தது. குஜராத்துக்கு அதிகபட்சமாக ரவி பிஸ்னோய் 2, விஷால் ஜெய்ஸ்வால் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.
உள்ளூரிலும் ஆட்டநாயகன்:
அடுத்து விளையாடிய குஜராத் முடிந்தளவு போராடியும் 47.4 ஓவரில் 247 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக உர்வில் பட்டேல் 31, ஆர்யா தேசாய் 57, சவுரவ் சவ்கான் 49 ரன்கள் எடுத்தனர். அதனால் வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற டெல்லிக்கு அதிகபட்சமாக பிரின்ஸ் யாதவ் 3, அர்பித் ராணா 2, நட்சத்திர மூத்த வீரர் இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு மட்டும் ஒரு நியாயமா? இந்தியாவை அடிக்கிறவங்க ஆஸியையும் கேள்வி கேளுங்க.. பீட்டர்சன் விமர்சனம்
இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த 2 போட்டிகளுடன் 2025 விஜய் ஹசாரே கோப்பையில் எஞ்சிய எஞ்சியப் போட்டிகளில் அவர் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு விளையாட மாட்டார் என்பதை ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த நிலைமையில் உள்ளூரில் 12 வருடம் கழித்து விளையாடிய 2 போட்டியிலும் 131, 77 ரன்களை குவித்துள்ள அவர் ஆட்டநாயகன் விருதை வென்று விடை பெறுவது குறிப்பிடத்தக்கது.



