ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது. அத்தொடரில் முதல் 3 போட்டியிலும் ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்ற ஆஸ்திரேலியா தொடர்ந்து 15வது வருடமாக ஆஷஸ் கோப்பையை வென்றது. மறுபுறம் பஸ்பால் அணுகுமுறையில் விளையாடி கோப்பையை வெல்வோம் என்ற சவால் விட்ட இங்கிலாந்து தொடர்ந்து 15வது வருடமாக ஆஸ்திரேலியாவில் ஒரு போட்டியைக் கூட வெல்ல முடியாமல் தோல்வியை சந்தித்தது.
அந்த நிலையில் 4வது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் நகரில் துவங்கியது. அப்போட்டி கிறிஸ்துமஸ் தினத்தின் அடுத்த நாளில் பாக்ஸிங் டே போட்டியாக நடைபெற்றது. அதனால் 94,199 மேற்பட்ட ரசிகர்கள் திரண்ட நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசி ஆஸ்திரேலியாவை 152 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது.
ஒருதலைபட்ச பிட்ச்:
ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 29, அலெக்ஸ் கேரி 20, மைக்கேல் நிஷர் 35 ரன்களை எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோஸ் டாங்க் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அடுத்து விளையாடிய இங்கிலாந்தை வெறும் 110 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்தது. அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 41 ரன்களை எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மைக்கல் நீசர் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்ததாக 42 ரன்கள் முன்னிலையுடன் விளையாடும் ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 4/0 ரன்களை எடுத்துள்ளது. முன்னதாக அப்போட்டியில் முதல் நாளிலேயே 20 விக்கெட்டுகள் விழுந்தது. அதன் வாயிலாக 21ஆம் நூற்றாண்டில் மெல்போர்ன் மைதானத்தில் முதல் நாளிலேயே 20 விக்கெட்டுகள் விழுந்த முதல் போட்டியாக இந்தப் போட்டி சாதனை படைத்தது.
நியாயம் கேட்கும் பீட்டர்சன்:
அந்தளவுக்கு மெல்போர்ன் பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவும் பேட்டிங் செய்வதற்கு சவாலாகவும் ஒருதலைபட்சமாக இருக்கிறது. இருப்பினும் அது பற்றி ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் யாரும் விமர்சிக்கவில்லை. ஆனால் கடந்த காலங்களில் இந்தியாவில் முதல் நாளிலேயே 15 விக்கெட்டுகள் விழுந்த போது இந்திய அணி குறுக்கு வழியில் வெல்வதற்காக வேண்டுமென்றே தங்களுக்கு சாதகமான பிட்ச்சை அமைத்ததாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் விமர்சித்துள்ளனர்.
இதையும் படிங்க: 2026 டி20 உலககோப்பை தொடருக்கு முன்னதாக தனது மாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய – ரிங்கு சிங்
இந்நிலையில் இப்படிப்பட்ட ஒருதலைப்பட்சமான பிட்ச் அமைத்ததற்காக அனைவரும் ஆஸ்திரேலியாவை விமர்சிக்க வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் விமர்சித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் விக்கெட்டுகள் பைத்தியக்காரத்தனமாக விழும் போது எப்போதும் இந்தியா அடித்து நொறுக்கப்படுகிறது. எனவே ஆஸ்திரேலியாவும் அதே ஆய்வை பெறும் என்று நம்புகிறேன். நியாயம் நியாயமாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.



