
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியானது நேற்று மும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியும், அலைசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதின. பலம் வாய்ந்த இரு அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
நேற்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்கள் குவித்தது. பின்னர் 339 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை துரத்திய இந்திய அணியானது வரலாற்று சாதனை வெற்றியை பதிவு செய்திருந்தது.
இந்த போட்டியில் கடினமான இலக்கினை துரத்திய இந்திய அணியானது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆட்டமிழக்காமல் 127 ரன்களையும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 89 ரன்களையும் குவித்து அசத்தினர்.
இந்திய அணி பெற்ற இந்த வெற்றியின் மூலம் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கும் முன்னேறியுள்ளது. இந்நிலையில் இந்த அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து பல்வேறு முன்னாள் வீரர்கள் மத்தியிலிருந்தும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இவ்வேளையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியும் இந்திய மகளிர் அணியின் இந்த சிறப்பான வெற்றிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து விராட் கோலி வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : ஆஸ்திரேலியா போன்ற ஒரு பலமான அணிக்கு எதிராக நம்முடைய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறது.
இதையும் படிங்க : ஹர்ஷித் ராணாவுக்கு இதுதான் ரோல்.. 2 ஆவது டி20 போட்டியில் மாற்றம் இருக்காது – தினேஷ் கார்த்திக் கருத்து
பெண்கள் கிரிக்கெட்டில் இது ஒரு மிகச் சிறப்பான சேஸிங் போட்டியாக மாறியுள்ளது. ஜெமிமாவின் ஆட்டம் இந்த போட்டியில் அற்புதமாக இருந்தது. உண்மையிலேயே இந்த போட்டியில் அவர் வெளிப்படுத்திய அபாரமான ஆட்டமும், நம்பிக்கையும் மிகச் சிறப்பான ஒன்று. சபாஷ் இந்தியா என்று விராட் கோலி வாழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.