2011 உ.கோ கம்பீர் மாதிரி 2023 உலக கோப்பையை விராட் கோலி வென்று கொடுப்பார் – 2011 உ.கோ தேர்வுக்குழு தலைவர் உறுதி

Gambhir
- Advertisement -

2023 புத்தாண்டில் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் மற்றும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வென்று 2013க்குப்பின் ஒரு ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் திண்டாடி வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய கிரிக்கெட் அணி போராட உள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான சீனியர்கள் சுமாராக செயல்பட்டு தோல்விக்கு காரணமாக அமைந்தனர். அதனால் டி20 கிரிக்கெட்டில் 2024 உலக கோப்பைக்கு முன்பாக இளம் அணியை உருவாக்கும் வேலை துவங்கியுள்ளது.

VIrat Kohli IND vs PAK

- Advertisement -

ஆனால் அதே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் 296 ரன்கள் விளாசி அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்த விராட் கோலி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஓய்வு பெறும் வரை விளையாட தகுதியானவன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். கடந்த 2008இல் அறிமுகமாகி 2011 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் ரன் மெஷினாக 24,000+ ரன்களையும் 71 சதங்களையும் விளாசி நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக பார்க்கப்படுகிறார். அப்படிப்பட்ட அவர் 2023 உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு மிகவும் இன்றியமையாத வீரராக கருதப்படுகிறார்.

கம்பீர் மாதிரி:
ஏனெனில் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக விமர்சனங்களை சந்தித்த அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ள நிலையில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளை விட ஒருநாள் கிரிக்கெட்டில் தான் அதிக சதங்களை அடித்து 10,000 ரன்களை குவித்து மிகச் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் 2011 உலக கோப்பை பைனல் உட்பட நிறைய போட்டிகளில் நங்கூரமாக நின்று வெற்றிக்கு உதவிய கௌதம் கம்பீர் போல 2023 உலகக்கோப்பையில் விராட் கோலி செயல்படுவார் என்று முன்னாள் இந்திய வீரர் மற்றும் 2011 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியை தேர்வு செய்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

gambhir1

குறிப்பாக இஷான் கிசான் போன்ற இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடும் அளவுக்கு எதிர்ப்புறம் விராட் கோலி நங்கூரமாக நின்று விளையாடுவார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியில் இருப்பவர்களுக்கு என்ன வேலை கொடுக்க வேண்டும்? என்பதில் தெளிவு வேண்டும். எடுத்துக்காட்டாக அதிரடியாக விளையாடும் இசான் கிசானை பாருங்கள். சொல்லப்போனால் சமீபத்தில் அவர் இரட்டை சதமும் அடித்துள்ளார். எனவே அவரைப் போன்ற வீரர்கள் சுதந்திரமாக அதிரடியாக விளையாடுவதை நீங்கள் தடுக்கக்கூடாது”

- Advertisement -

“இஷான் கிசான் போலவே நமது பேட்டிங் வரிசையில் எதற்கும் பயப்படாமல் அதிரடியாக 3 வீரர்கள் தேவைப்படுகிறார்கள். அதே போல் ஆல் ரவுண்டர்கள், பேட்டிங் ஆல் ரவுண்டர்கள், பவுலிங் ஆல் ரவுண்டர்கள் உங்களது பேட்டிங் வரிசையில் தேவை. இவர்கள் அனைவரும் நமது அணியில் கலவையாக இருக்க வேண்டும். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் கௌதம் கம்பீர் போல நங்கூரமாக நின்று பேட்டிங் செய்யும் ஒரு வீரரும் உங்களுக்கு அவசியம். அந்த வேலையை தற்போது விராட் கோலி கச்சிதமாக செய்வார். அவர் இளம் வீரர்கள் அதிரடியாக விளையாட உதவுவார்”

Srikkanth

“எடுத்துக்காட்டாக வங்கதேச ஒருநாள் தொடரில் விராட் கோலி சதமடித்த போது இசான் கிசான் இரட்டை சதமடித்தார். எனவே வெற்றி என்பது உங்களது வீரர்களுக்கு நீங்கள் எந்தளவுக்கு சுதந்திரம் கொடுக்கிறீர்கள் என்பதில் தான் உள்ளது. குறிப்பாக நீங்கள் அவுட்டானாலும் பரவாயில்லை என்று பயப்படாமல் உங்களுடைய அணுகு முறையை பின்பற்றி விளையாட வேண்டும். 1983 உலகக் கோப்பை வீரராக வென்ற நான் 2011 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியை தேர்வு செய்தேன் என்ற மிகச்சிறந்த உணர்வை என்னுடைய பேரன்களிடம் பெருமையாக சொல்வேன்”

இதையும் படிங்க2 மேட்ச் சொதப்புன அவருக்கு இடம். 7 சிக்ஸ் அடிச்சவருக்கு இடமில்லையா? – ரசிகர்கள் கேள்வி

“மேலும் உலக கோப்பையில் கௌதம் கம்பீர் விளையாடிய இன்னிங்ஸ் அபாரமானது. அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவிப்பதுடன் அவரால் நான் பெருமையும் அடைகிறேன். இந்த நிலையில் அவரைப் போலவே 2023 உலகக் கோப்பையில் விராட் கோலி இந்தியாவின் நாயகனாக செயல்படுவார் என்று நான் கணிக்கிறேன்” என கூறினார்.

Advertisement