3 வகையிலும் ஆல்-டைம் சிறந்த வீரராக வருவார் – கடைசி போட்டிக்கு முன்பாக இந்திய வீரரை பாராட்டிய பென் ஸ்டோக்ஸ்

Stokes
- Advertisement -

இங்கிலாந்தைச் சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் பணிச்சுமை காரணமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2011இல் அறிமுகமாகி 2013 முதல் 3 வகையான இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த அவர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் அபாரமாக செயல்பட்டு அந்த அணியின் முதன்மை ஆல்-ரவுண்டராக நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார். குறிப்பாக 2019இல் சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 84 ரன்கள் குவித்த அவர் ஆட்டநாயகன் விருதை வென்று இங்கிலாந்து முதல் முறையாக உலக கோப்பையை கையிலேந்த முக்கிய பங்காற்றினார்.

அதனால் உலகின் நம்பர் ஒன் ஆல் ரவுண்டர் என அனைவராலும் போற்றப்பட்ட அவர் சமீபத்தில் இங்கிலாந்தின் புதிய டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்றார். அந்த நிலைமையில் இந்தியாவுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் 0, 21, 27 என சுமாராக செயல்பட்ட அவர் பணிச்சுமை காரணமாக டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே கடந்த வருடம் பணிச்சுமையால் சில மாதங்கள் ஓய்வெடுத்து கம்பேக் கொடுத்த அவர் 3 வகையான கிரிக்கெட்டில் விளையாட தமது உடல் ஒத்துழைக்கவில்லை என்பதை வெளிப்படையாக கூறியதுடன் எதிர்பார்க்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படாமல் இதர வீரர்களின் வாய்ப்பையும் கெடுக்க விரும்பவில்லை என்பதால் மற்ற வீரர்களுக்கு வழிவிடும் வகையில் சுயநலமில்லாமல் இந்த முடிவை எடுத்துள்ளார்.

பாராட்டிய கோலி:
மேலும் ஜூலை 19-ஆம் தேதியன்று தனது சொந்த ஊரான டுர்ஹாம் மைதானத்தில் துவங்கும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியுடன் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் விடைபெறுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அவரின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியாக அமைந்தாலும் இப்படி சுயநலம் இல்லாமல் வெளிப்படையாக நடந்து கொள்ளும் அவரின் நேர்மையை பாராட்டி நிறைய முன்னாள் வீரர்களும் ஜாம்பவான்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் “நான் விளையாடியதிலேயே நீங்கள் மிகச்சிறந்த போட்டியாளராக இருந்தீர்கள், உங்களின் முடிவை மதிக்கிறேன்” என்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாராட்டியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக தனது கடைசி போட்டியில் களமிறங்குவதற்கு முன்பாக அவரை சந்தித்த இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மற்றும் வர்ணனையாளர் நாசர் ஹூசைன் விராட் கோலியின் வாழ்த்தை பார்த்தீர்களா அதற்கு உங்களின் பதில் என்ன என்று கேள்வி எழுப்பினார். அதற்கு 3 வகையான கிரிக்கெட்டிலும் ஓய்வு பெறும்போது விராட் கோலி வரலாற்றின் மிகச்சிறந்த வீரராக இருப்பார் என்று பென் ஸ்டோக்ஸ் பதிலளித்து ஆச்சர்யப்படுத்தினார்.

ஆல்-டைம் கிரேட்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் பார்த்தேன். நிறைய பேர் விளையாடிய இந்த விளையாட்டில் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடிய மகத்தான ஒருவராக விராட் கோலி வரப்போகிறார். அவர் ஒரு அபாரமான வீரர். அவருக்கு எதிராக விளையாடிய போட்டிகளில் ஒவ்வொரு தருணங்களையும் மிகவும் மகிழ்ச்சியாக எதிர்கொண்டேன். களத்தில் ஒவ்வொரு போட்டியிலும் அவர் காட்டும் எனர்ஜியையும் ஆக்ரோஷத்தையும் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு முன்பாக இருந்தே நான் ரசித்து வருகிறேன்”

- Advertisement -

“அவரைப் போன்ற ஒரு தரமான வீரருக்கு எதிராக நீங்கள் விளையாடும் போது தான் போட்டியின் உண்மையான மதிப்பு தெரியும். அந்த வகையில் நான் மட்டுமல்லாது அவருக்கு எதிராக விளையாடி அனைவருமே அதிர்ஷ்டம் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். அவருடன் இன்னும் நிறைய போட்டிகளில் போட்டி போடுவேன் என நம்புகிறேன்” என்று கூறினார். ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றாலும் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட உள்ள பென் ஸ்டோக்ஸ் அந்த வகையான போட்டிகளில் விராட் கோலிக்கு எதிராக விளையாட ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008இல் அறிமுகமாகி 2011 முதல் 3 வகையான இந்திய அணியிலும் ரன் மெஷினாக 20000க்கும் மேற்பட்ட ரன்களையும் 70 சதங்களையும் அடித்து ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்துள்ள விராட் கோலி கடந்த 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக அணியில் இருந்து நீக்க வேண்டும் என்பது போன்ற கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

இதையும் படிங்க : பென் ஸ்டோக்ஸ் ரிட்டயர்டு ஆனதுக்கு ஐ.சி.சி தான் காரணம் – நாசர் ஹுசேன் குற்றச்சாட்டு

ஆனால் அவரின் திறமையையும் அருமையை உணர்ந்த கெவின் பீட்டர்சன், கிரேம் ஸ்வான் போன்ற இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் விராட் கோலி தங்களது நாட்டில் விளையாடியிருந்தால் விமர்சிக்க மாட்டோம் என்று ஆதரவை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்தின் உலக கோப்பை நாயகன் பென் ஸ்டோக்சும் பாராட்டியுள்ளது இந்திய ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement